பாகம் 10
பதிகமும், பாசுரமும் ஒன்றுக்கொன்று ஒட்டி விளங்கும் வகையில் சைவமும், வைணவமும் நம் தமிழ்த்திருநாட்டில் தழைத்தோங்கியிருக்கின்றன. இந்த இறுதிப் பாகத்தில் மேலும் சில
தலங்களைத் தரிசிப்போம்.
திருஎவ்வுள் / திருப்பாச்சூர் / திருவாலங்காடு
திருஎவ்வுள் என்கின்ற திவ்ய தேசம் திருவள்ளூரைக் குறிக்கும். இது சென்னையிலிருந்து சுமார் 53 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாள், வைத்திய வீரராகவராக சயனக் கோலத்தில் காட்சி அருள்கிறார்.
(திருமங்கை ஆழ்வர் 11, திருமழிசை ஆழ்வர்1).
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள்
கிடந்தானே. (திருமங்கை ஆழ்வார், 1063)
‘‘தொண்டர்கள் பலரால் நெருங்கி வழி
படப்படுபவரும், பக்தர்கள் சரணாகதி என்று புகலிடம் கோரப்படுபவரும், பக்தர்களுக்கு ஆப்தனாய் (நண்பனாய்) இருப்பவரும், செந்தாமரைக் கண் உடையவரும், ரிஷிகளால் மும்மூர்த்தியாக வழிபடப்படுபவரும் நம்பி (அரசன்)யாகிய பெருமாள் எவ்வுள்ளில் கிடந்தார்’’. இந்தப் பாசுரத்தில் பெருமாளே சிவன் என்ற உண்மையைத் திருமங்கை ஆழ்வார் உணர்த்துகிறார். திருவள்ளூர்ப் பெருமாளைச் சரணாகதி அடைந்தால் அவர் ஆப்தராய் அருள் செய்வார் என்று கூறுகிறார்.
திருவள்ளூருக்கு அருகில் 4 கி,மீ தூரத்தில் பாடல் பெற்ற திருப்பாச்சூரும் (சம்பந்தர் 11, அப்பர் 20), அடுத்து 18 கி.மீ. தொலைவில் திருவாலங்காடும் (சம்பந்தர் 11, அப்பர் 20, சுந்தரர் 10) உள்ளன. திருவாலங்காடு, சிவன் ஊர்த்வ தாண்டவம் ஆடிய தலம். காளியோடு நடனம் ஆடும் பொழுது இறைவன் காலைத் தூக்க, காளி தோல்வி அடைந்ததாக வரலாறு.
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே. (அப்பர் 4.68.1)
கூடினார் உமைதனோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிக ளாரே. (அப்பர் 4.68.8)
முதல் பாட்டில் அப்பர் ஆலங்காட்டு இறைவர், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ந்து மகிழும் அடியவர்க்கு அன்பராய் அவர்களின் வினைகளின் மாசுகளைப் போக்குபவராய் விளங்குகிறார் என்கிறார். ‘‘இறைவன் உமையோடு எப்பொழுதும் இருப்பவர். மிகப் பெரிய கங்கை அவர் சடையில் உறிஞ்சப்பட்டது. அவர் சாமவேதம் பாடினார், பழையனூர் என்ற திருவாலங்காட்டில் உள்ளார். அங்கு அவர் காளி காண நடனம் ஆடினார்’’.
திருமங்கை ஆழ்வார், திருஎவ்வுள் பெருமாள் அன்பருக்கு அன்பராய் இருக்கிறார் என்று சொன்னது போலவே அப்பரும் ஆலங்காட்டு அடிகள் அன்பருக்கு அன்பராய் இருக்கிறார் என்று கூறுவதில், இவ்விருவரிடையேயான ஒற்றுமையை அறிந்து உவக்கலாம். அப்பர் எட்டாவது பதிகத்தில், திருவாலங்காட்டில் இறைவன் நடனம் ஆடிய தல புராணத்தை விளக்குகிறார். இறைவன் இவ்வாறு நடனம் புரிந்த இந்தத் தலம் ரத்தின சபை என்று அழைக்கப்படுகிறது. அப்பர் திருவாலங்காட்டைப் பழையனூர் என்று கூறுகிறார். பழையனூர் நீலி கதை மிகவும் பிரசித்தமானது. துரோகம் செய்த கணவனை நீலி பழி வாங்கியதாக வரலாறு.
29. திருக்கபிஸ்தலம் / திருஆதனூர் / திருபுள்ளம்பூதங்குடி / திருஆவூர் / திருநல்லூர் / திருவலஞ்சுழி
இந்த ஆறு கோயில்களும் அருகருகே உள்ளன. இவை தஞ்சாவூர் – கும்பகோணம் வழியில் உள்ளன. கபிஸ்தலம், ஆதனூர், புள்ளம்பூதங்குடி மூன்றும் திவ்ய தேசக் கோயில்கள். ஆவூர், நல்லூர், திருவலஞ்சுழி மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். இத் தலங்கள் எல்லாமே கும்பகோணத்திலிருந்து அதிக பட்சம் 10 கி.மீ தூரத்தில் அமையப்பெற்றவை. பாசுர பதிக விவரங்கள்:
1. திருக்கவித்தலம் – திருமழிசை ஆழ்வார்(1).
2. திருப்புள்ளம்பூதங்குடி – திருமங்கை ஆழ்வார்(10).
3. திரு ஆதனூர் – திருமங்கை ஆழ்வார்(1).
4. திரு ஆவூர் – சம்பந்தர்(11).
5. திரு நல்லூர் – சம்பந்தர்(11), அப்பர்(20).
6. திருவலஞ்சுழி – சம்பந்தர்(33), அப்பர்(20).
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே. (திருமங்கை ஆழ்வார் 1351) கோவர்தன மலையைத் தூக்கியவனும் பலவானான ராவணனின் திண்மை பொருந்திய இருபது தோள்களையும் அறுத்தவனும் வலிமை பொருந்திய சார்ங்கம் எனும் வில் உடைய வல்வில் இராமன் வாழும் இடம் திருப்புள்ளம் பூதங்குடியே என்று திருமங்கை ஆழ்வார் ஊர் பெயரும் ராமன் பெயரும் அமையுமாறு இந்தப் பாசுரத்தை அருளியிருக்கிறார்.
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழு மணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே. (சம்பந்தர் 2.106.1)
‘‘திருவலஞ்சுழியில் வாழும் இறைவன் பெயரைச் சொல்லவும் அவர் புகழை வாயார வாழ்த்தவும் நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ!’’ என்று சம்பந்தர் கூறுகிறார்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே (அப்பர் 6.14.1)
‘‘நல்லூர் இறைவன் அடியவரின் தீவினைகளைப் போக்கினார்.
தேவர்கள் அவரை வணங்கும் போது அவர்களின் மகுடத்தில் இருந்து விழுந்த மலர்களின் தேனால் அபிஷேகம் செய்யப்பட்ட தம் காலை இறைவன் என் தலை மேல் வைத்தார்’’ என்று அப்பர் பாடுகிறார். நல்லூரில் இறைவன் தனது பாதத்தை அப்பர் தலை மேல் வைத்ததாக வரலாறு. இறைவன் மீது அப்பரின் பக்தியும், இறைவன் அவர் மீது பாதத்தை வைக்கும் அளவிற்கு அவர் செய்த புன்ணியமும்தான் என்னே!
30. திருவெள்ளறை / திருப்பைஞ்சீலி
திருவெள்ளறை திருச்சிக்கு 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இதே பகுதியில் உள்ள திவ்ய தேசம், புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயில். (பெரியாழ்வார் 11, திருமங்கை ஆழ்வார் 13)
கோயில், வெள்ளைக் கற்களால் கட்டப்பட்டதால் வெள்ளறை. இரண்டு வாயில்கள் உண்டு. நேரம் தாண்டிப் பெருமாள் வந்ததால் தாயார் ஏன் என்று கேட்பாரோ என்று அஞ்சி, பெருமாள் இன்னொரு வாயில் வழியாக நுழைந்தார் என்பது வரலாறு.
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமிழ்மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும் கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்- சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. (பெரியாழ்வார் 71)
பெரியாழ்வார் மூன்றாவது வரியில், குறுங்குடியில் இருப்பவனும் வெள்ளறையில் இருப்பவனும் சோலைமலைக்கு அரசனாய் இருப்பவனும் கண்ணபுரத்தில் ஞானியாய் இருப்பவனும் ஒருவனே; அவனே, அன்று ஆய்ச்சியர்கள் தம் இடுப்பில் வைத்துக் கொஞ்சிய குழந்தையான கண்ணன் என்று கூறுகிறார். எனக்கு அருள் செய்தவனே! என் அவலம் களைபவனே! ஏழுலகுக்கும் அதிபதியே, நீ செங்கீரை ஆடு! மெதுவாக ஆடு என்று கூறுகிறார். இப்பாசுரத்தில் ஆழ்வாரின் கிருஷ்ண பக்தி அற்புதமாகத் தெரிகிறது. திருவெள்ளறைக்கு 4 கி.மீ அருகில் திருப்பைஞ்சீலி என்ற பாடல் பெற்ற தலம் (சம்பந்தர் 22, அப்பர் 10, சுந்தரர் 10) உள்ளது.
தூயவன் தூய வெண்ணீறு மேனிமேல்
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலாய்
மேயவன் வேய்புரை தோளி பாகமாய்
ஏயவந் எனைச் செயும் தன்மை
என்கொலோ (சம்பந்தர் 3.14.7)
‘‘பைஞ்சீலியைக் கோயிலாயுடைய இறைவன் தூய்மையனவன்; தூய நீறு பூசியவன்; உமையைப் பாகமாகக் கொண்டிருப்பவன்; என்னைச் சிவனாக்கும் அவன் செயல்
வியக்கத்தக்கது’’ஒவ்வொரு பக்தனும் இறைவன் அருளை பெற்று சிவமயம் ஆக வேண்டும் என்ற உண்மையைச் சம்பந்தர் அழகாக விளக்குகிறார். திருப்பைஞ்சீலி இறைவன் நம்மை சிவமயமாக்குவார் என்று பக்தர்களுக்குக் கூறுகிறார்.
முப்பது கோயிலில் சிவனும் மாலும்
முப்போதும் நினைப்பார்க்கு அருளும் உறவினர்
எப்போதும் இருவரை வணங்கும் மாந்தர்க்கு
தப்பாது கிட்டும் வீடும் நாடும்
(முற்றும்)
பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்