பொடுகு என்பது உச்சந்தலையை பாதிக்கும் ஒரு தோல் பிரச்னை. பலருக்கு பொடுகு தொல்லையால் சங்கடம் ஏற்படுகிறது. தங்கள் உடையில் உதிர்ந்து விடும். சிறு சிறு செதில்களால் கூச்சத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் பொடுகு அதிகமாக இருந்தால் தலையில் அழுக்கும் அதிகமாகும், இதனால் விரல் நகங்களிலும் கூட அழுக்கு சேரும் பிரச்னை உள்ளது. பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா – என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகின்றார்கள். மேலும் இரு வகையான பொடுகுகள் உள்ளன. ஒன்று வறண்ட பொடுகு, இவை செதில் செதிலான வெள்ளைப் பொடி போல் உதிரும், மற்றொன்று மெழுகு போன்ற ஈரப்பதப் பொடுகு. இவை தலையில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பை உண்டாக்கும். பொடுகின் முதற்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை விரட்டிவிடலாம். அதற்கு வேப்பிலை, வேப்பெண்ணெய், வேப்பம் பூ, எலுமிச்சை பழம் போதும்.
இவற்றை பயன்படுத்தி பொடுகை போக்குவது எப்படி?
முதலில் வேப்பிலைகளை அரைத்து அதில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து பசைபோல ஆக்கி, உச்சந்தலையில் இருந்து கேச நுனிவரை தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்னர் சீயக்காய் கொண்டு தலையை கழுவ வேண்டும்.அடுத்து வேப்பெண்ணெய்யுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தலையில் தடவவும். இதை 20 நிமிடங்களுக்கு பின் கழுவினால் பொடுகு நீங்கி விடும்.வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து அந்த விழுதை தலையில் தேய்த்து குளித்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.இந்த முறையை வாரத்துக்கு ஒன்றிரண்டு தடவை செய்யலாம். இதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சைனஸ், ஜலதோஷம் பிரச்னைகள் உள்ளோர் கூடுமானவரை இந்த வேம்பு+எலுமிச்சை விழுதை பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது. அல்லது வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தி 10 நிமிடங்கள் மட்டுமே வைத்திருந்து மிதமான வெந்நீரில் குளிக்கலாம். சோற்றுக் கற்றாழையின் ஜெல் பகுதியை மட்டும் தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்க பொடுகு, தலையில் ஒட்டிக்கொண்டு சங்கடப்படுத்தும் இறந்த ஈறுகள் உள்ளிட்டவையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி தலைமுடி சுத்தமாகும்.
– அ.ப.ஜெயபால்