*தென்னக ரயில்வே பொதுமேலாளர் தகவல்
கோவை : கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கிகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
கோவையின் இரண்டாவது ரயில் முனையமாக போத்தனூர் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுகிறது. அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். இரண்டாவது ரயில் முனையமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், போத்தனூரில் இருந்து புதிய ரயில் சேவைகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். இதனிடையே போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கோவை-மங்களூரு இண்டர்சிட்டி ரயில் மற்றும் எர்ணாகுளம்-காரைக்கால் ரயில் ஆகியவற்றை போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். போத்தனூர் ரயில்வே பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு முன்பாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம்-கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். கோவை-சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ஈரோடு-ராமேஸ்வரம் ரயிலை கோவை, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.