பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த பெண் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக சிஐடி போலீசார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சிஐடி போலீஸ் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் எடியூரப்பா நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்த துணை போலீஸ் டிஎஸ்பி புனித் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார். புனித் எழுப்பிய பல கேள்விகளுக்கு எடியூரப்பா பதில் கொடுத்ததாக தெரியவருகிறது. பின் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
* ரேவண்ணா, பிரஜ்வல்லிடம் விசாரணை
பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பென்டிரைவ் புகாரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரிடம் சிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.