சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடைமைகளை எடுக்கச் சென்றபோது, தாய்மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தந்தையிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியின் தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாய்மாமா 2வது முறையாக தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்ததாக கூறப்படுவது 2022 டிசம்பர். ஆனால் 2023 மார்ச் மாதம்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மனுதாரரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுகிறது. திரைமறைவில் இருந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என்று மனுதாரர் கூற முடியாது. எனவே, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் முக்கியமாகும் என்று நீதிபதி தெரிவித்தார்.