போச்சம்பள்ளி : தொடர் மழை காரணமாக, போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரி நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. இதனை கண்டு ரசிப்பதற்காக சுற்றுவட்டார மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஏரியில் கிடைக்கும் மீன்களை இரையாக்கி கொள்வதற்காக பறவைகள் முகாமிட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவில் பாரூர் பெரியஏரி 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய ஏரியான இது, சுமார் 70 கிராமங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், தென்பெண்ணை ஆறு வழியாக நெடுங்கல் தடுப்பணைக்கு வந்து, பின்னர் அங்கிருந்து பெரிய ஏரிக்கு வருகிறது.
இந்த ஏரியில் 249 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1.583.5 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் என மொத்தம் 2,397,42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் மூலம் போச்சம்பள்ளி, மத்தூர், பெனுகொண்டாபுரம், ஏரி வழியாக ஊத்தங்கரை பக்கம் உள்ள பாம்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது.
கடும் வெயில் காரணமாக, பாரூர் பெரியஏரியில் நீர்மட்டம் குறைந்து குட்டை போல் காணப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, கிருஷ்ணகிரி அணைக்கு வந்த 86 அடி கனஅடி தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெடுங்கல் தடுப்பணைக்கு வந்து, அங்கிருந்து பாரூர் பெரிய ஏரிக்கு வந்தது. இதனால், ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஏரியின் உபரி நீர், போச்சம்பள்ளி கோணணூர் ஏரிக்கு வந்து திருவயல் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியில் தண்ணீர் நிரம்பி, கடல் போல் காட்சி அளிப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர், ஏரியை காண வந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஏரியில் கிடைக்கும் மீன்களை இரையாக்கி கொள்வதற்காக ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன. இதனால், அப்பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது.