*குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ தகவல்
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
குறைந்த மின்அழுத்தம் காரணமாக பழுதாகும் மின்மோட்டார்கள் சரி செய்ய அரசு ₹10 ஆயிரம் மானியமாக வழங்க வேண்டும். காவேரிப்பட்டணத்தில் இருந்து சின்னஆலேரஅள்ளி வழியாக மத்தூர், திருவண்ணாமலைக்கு புதிய பஸ், காவேரிப்பட்டணம் – சின்னபெல்லாரம்பள்ளி வழியாக ஆலப்பட்டிக்கு செல்ல டவுன் பஸ்கள் இயக்கினால், விளைப்பொருட்களை விற்பனை கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும்.
குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எதற்காக நாங்கள் நீண்ட தூரத்தில் இருந்து, செலவு செய்து வந்து இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஒரே கோரிக்கை குறித்து ஆண்டுக்கணக்கில் மனு அளித்தாலும், பதிலும் இல்லை.
வங்கிகளில் எங்களது குழந்தைகளுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தாலும் வழங்கப்படுவதில்லை. 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, கல்விக்கடன் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். இது போன்ற விதிகள் உள்ளதை ஏற்கனவே தெரிவித்திருந்தால், எங்கள் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி வைத்திருப்போம் அல்லது ஆடு, மாடுகள் மேய்க்க அனுப்பி வைத்திருப்போம். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், விவசாயிகள் பயனுள்ளதாக இருக்கும். போச்சம்பள்ளி வாரச்சந்தையின் ஒரு பகுதியில் தினசரி உழவர் சந்தை நடத்த வேண்டும். பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வரை கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த நாகரசம்பட்டி பேரூராட்சி விவசாயிகளுக்கு, இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் அடிக்கடி பழுது ஏற்படுவதால், முதியவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் நிலையும், அலைகழிக்கப்படுவதும் தொடர்கிறது. விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். நாங்கள் காட்டிற்குள் வந்தால் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் எங்களது நிலத்தில் நுழைந்து, பயிர்கள் சேதம் செய்வதை தடுப்பதில்லை. கங்கலேரி பகுதிகளில் அதிகரிக்கும் குரங்குகள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் பேசியதாவது: குறைந்த மின்அழுத்ததால் பழுதாகும் மின்மோட்டார்கள் சரி செய்ய, மானியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க ஆய்வு செய்யப்படும். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது, தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்த பின்பு இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
மனுக்கள் மீது களஆய்வு செல்லும் அலுவலர்கள், விவசாயிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். கடந்த 3 மாதங்களில் விவசாயிகள் அளித்த 79 மனுக்கள் மீது, இதுவரை தொடர்புடைய அலுவலர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இனி மனுக்கள் தொடர்பாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். கல்விக்கடன் உள்ள இடையூறுகள் களையப்படும். உழவர் சந்தை மூலம் குறைந்தபட்சம் 1000 விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
மேலும், போச்சம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்கப்படுவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் போச்சம்பள்ளியில் உழவர் சந்தை அமைப்பதற்கான அறிவிப்பு வெளிவரும். தற்போது தென்னங்கன்றுகள் 60 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. முழு மானியத்தில் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கில் குடும்பத்தலைவரின் ரேகை பதிவாகவில்லை என்றால், குடும்பத்தில் உள்ள ஒருவர் கைரேகை பதிவு செய்து வாங்கிச் செல்லும் முறை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமகவுண்டர், சிவகுரு, மகாராஜன், நசீர்அகமத், தாசப்பா, பாலகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.