திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்காத நிலையில் பிரதமர் மோடி இன்று வயநாடு வந்தார். அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இந்நிலையில், வயநாட்டில் நேற்று சூஜிப்பாறை பள்ளத்தாக்கில் 4 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 420ஐ தாண்டி இருக்கிறது. இங்கு தினமும் உடல்களும், உடல் பாகங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நேற்று மதியம் வரை உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதியத்திற்கு பிறகு இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 20 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சூஜிப்பாறை அருவிக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக உடல்களை தேடும் பணி நடைபெற்றது. மிகவும் கடினமான, யாராலும் எளிதில் செல்ல முடியாத இந்தப் பகுதியில் இருந்து சில உடல்கள் மீட்கப்பட்டன.
ராணுவம், கேரள போலீசின் சிறப்புப்படை, வனத்துறையினர் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று உடல்களைத் தேடி வருகின்றனர். நேற்று இங்கு சென்றபோது 3 உடல்கள், ஒரு உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவற்றை கொண்டுவர முடியவில்லை. இதனால் மீட்புப் படையினர் திரும்பினர். இந்தநிலையில் உடல்களைக் கொண்டு வருவதற்காக மீட்புக் குழுவினர் இன்று காலை ஹெலிகாப்டரில் சூஜிப்பாறைக்கு சென்றுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலை, காப்பி, ஏலம் உள்பட விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே இந்த பெரும் நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வயநாடு வந்தார். அவரிடம் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் விமானம் மூலம் பிரதமர் மோடி கண்ணூர் வந்தார். பின்னர் அங்கிருந்து வயநாடு சென்றார். அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்துப் பேசினார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். முன்னதாக விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.