சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல் – காசா போரால் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும், மனித உரிமைகள் மீறப்படுவதும் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. லட்சக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேறி எங்கு செல்வது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர். இது உலக போராக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுவாக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உலக தலைவர்களின் நன் மதிப்பையும், அன்பையும் பெற்றிருக்கும் பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டு பிரதமருடனும், பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவருடனும் இதுகுறித்து பேசியிருப்பதும், பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவரிடம் உறுதி அளித்திருப்பதும் ஆறுதலை தருகிறது. இருப்பினும், இஸ்ரேல்-காசா பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் போரினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.