கொல்கத்தா: பலாத்காரம், கொலை குற்றங்களுக்கு முன்மாதிரியான தண்டனையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தி முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜிகர் மருத்துவமனையில்கடந்த 9ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலத்தில் மருத்தவர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு பலாத்கார வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,‘‘பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்குவது தொடர்பாக கடுமையான மத்திய சட்டத்தின் அவசியம் குறித்து 22ம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். நீங்கள் தயவுசெய்து அதனை நினைவுகூரலாம். உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. அதற்கு பதிலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து பதில் கிடைத்தது. மேற்கு வங்கத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் அடுத்த வாரம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். மேலும் 10 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.