புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு ஆட்சியில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மறுவரையறை செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு தொடர்ந்து தனது 3வது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதையொட்டி, கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பாஜ கூட்டணி அரசின் சாதனை மற்றும் திட்டங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டு வருகிறார். பிரதமர் மோடி நேற்றைய தனது எக்ஸ் பதிவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை குறிப்பிட்டு கூறியிருப்பதாவது: அறிவியல், கல்வி, விளையாட்டு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி பலரை ஊக்குவித்து வருகின்றனர்.
இதற்காக, தூய்மை இந்தியா திட்டம் மூலம் பெண்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் இருந்து ஜன்தன் கணக்குகள் மூலம் நிதி சார்ந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது வரை பல முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா மூலம் ஏழை பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கி புகை இல்லாத சமையல் அறைகள் கொண்டு வந்துள்ளோம். முத்ரா கடன்கள் லட்சக்கணக்கான பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவியது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் பெயரில் வீடுகளும் சமூகத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.