பாட்னா: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராவார் என்று கூட்டணி கட்சியின் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரசாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் வரும் ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜ சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தன்யவானில் நடந்த பிரசார கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 400 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதே போல் மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் நாடும், பீகாரும் வளம் பெறும் என்றார். அவரது பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நிதிஷ்குமாரிம் கூறினார். அதை கேட்டதும், மோடிதான் ஏற்கனவே பிரதமராக இருக்கிறாரே. அதனால்தான் அவர் அடுத்த பதவிக்கு நகர வேண்டும் என்று நிதிஷ்குமார் பேசினார். அவர் வாய் தவறி பேசினாரா, அல்லது தேர்தல் நிலவரம் தெரிந்து பாஜ கூட்டணி தோற்கும் என்பதை உணர்ந்து அப்படி பேசினாரா? என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.