Tuesday, March 25, 2025
Home » 2025-26ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்

2025-26ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்

by Arun Kumar


திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் வெளியிட்டார். 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,02,010 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,97,123 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் குறைந்த அளவிலேயே இருக்கும்.

2025-26 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.46,319 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.25,536 கோடி என்ற அளவில் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 1.20 கோடி பேர் காத்திருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 70,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 37,026 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், 33,655 பேருக்கு தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. இது போதுமானதல்ல.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை நிரப்ப நடப்பாண்டில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும். தமிழக அரசால் தொடங்கப்படவுள்ள 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளில் பணி செய்வதற்காக ஒரு லட்சம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் வாரியத்திற்கு 12,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதி பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கு 10,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 10. அரசுப் பள்ளிகளில் முதல்கட்டமாக 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். காவல்துறை, தீயவிப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். போக்குவரத்துத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு 10,000 பேர் நியமனம் செய்யப்படுவார்கள்.

மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதல்கட்டமாக 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 மருத்துவர்கள், 3,000 மருத்துவத்துறை பணியாளர்கள் என மொத்தம் 7,000 பேர் நியமிக்கப்படுவர்.

அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை அடுத்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.

தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

நான்காம் தொழில் புரட்சியின் முதன்மை அம்சமான செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும். போக்குவரத்துத் திட்டமிடல், மருத்துவ சேவை, தரவு கையாளுதல், தானியங்கி உரையாடல், சைபர் தாக்குதலைத் தடுத்தல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவுத் திறன் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கான மனித வளத்தை உருவாக்குவதற்காக அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவுத் திறன் ஒரு கட்டாயப் பாடமாக்கப்படும்.

பட்டப்படிப்பில் முதல் இரு ஆண்டுகளில் ஒவ்வொரு பருவத்திலும் செயற்கை நுண்ணறிவுத் திறன் சார்ந்த ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிப்பது கட்டாயமாக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி தமிழ்நாட்டில் ஜூலை 25ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் திசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெறப்பட்டு, வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக அளவாக 17.25% மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க ஆணையம் அமைக்கப்படும்.

* ஜனவரி 25 உலகத் தமிழ்மொழி நாளாக கடைபிடிக்கப்படும்

இந்தி எதிர்ப்புப் போரின்போது, அன்னைத் தமிழை காக்க உயிர்த்தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஜனவரி 25ஆம் தேதி உலகத் தமிழ்மொழி நாளாக கடைபிடிக்கப்படும். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றப்படும். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்று 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும். பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10,000 அபராதம். 3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பின், அதைப் பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, 2026 ஜனவரி மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

* அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வு

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய 246% அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், சரண் விடுப்பு சலுகை ஆகிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிற கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி, அடுத்த 6 மாதங்களில் தீர்வு காணப்படும்.

காப்பீடுதாரர்களுக்கு நியாயமான காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்படும். உழவர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடைக்க வகை செய்ய பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடக்கம்.

* மே 1 முதல் மதுவிலக்கு

மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தந்தால் ரூ.10 ஆயிரம் பரிசு. போதை பொருள் விற்பனையை தடுக்கத் தவறும் அதிகாரிகள் பணிநீக்கப்படுவார்கள்.

* கல்வி, மருத்துவத்துறைக்கு ரூ.2.20 லட்சம் கோடி ஒதுக்கீடு

அனைவருக்கும் தரமான மருத்துவமும், கல்வியும் கிடைக்க தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் 9% ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் அது சாத்தியமல்ல. கல்வி, மருத்துவத்துறைக்கு உற்பத்தி மதிப்பில் 6% அதாவது, ரூ.2.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும். பள்ளிக்கல்விக்கு ரூ.1.10 லட்சம் கோடி, உயர் கல்விக்கு ரூ.36,560 கோடி, மருத்துவத் துறைக்கு ரூ.73,120 கோடி ஒதுக்கப்படும்.

* மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இருமொழி கொள்கை தொடரும். மாநிலக் கல்விக்கொள்கை 2025 ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

* தொகுதிக்கு ஓர் அரசுக் கலைக்கல்லூரி

தமிழ்நாட்டில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா ஓர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். ஏற்கெனவே 164 கலைக் கல்லூரிகள் உள்ள நிலையில், 70 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். பல்கலைக் கழகங்களின் வருவாயைப் பெருக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும். . 108 அவசர ஊர்தி திட்டத்தின்கீழ் இயக்கப்படும் அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும். மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* ரூ.318-க்கு சமையல் எரிவாயு உருளை

சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம். இனி ரூ.318க்கு சமையல் எரிவாயு கிடைக்கும். ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும். முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் 70 லட்சம் பேருக்கு முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்படும்.

* ரூ.2 லட்சம் கோடி வரியில்லாத வருவாய் ஈட்டத் திட்டம்
2025-26ஆம் ஆண்டில் வரி அல்லாத வருவாயின் அளவை இதை ரூ.2,02,010 கோடியாக உயர்த்த சிறப்புத் திட்டம். கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.25 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.45,000 கோடியும் ஈட்டப்படும். பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.30,000 கோடி கிடைக்கும். தமிழ்நாடு அரசு அடுத்த 20 ஆண்டுகளில் அடைக்க வேண்டிய ரூ.4.79 லட்சம் கோடி கடன் அடுத்த ஆண்டுகளில் அடைக்கப்படும். நடப்பாண்டில் இயல்பாக அடைக்க வேண்டிய ரூ.41,133 கோடி கடனுடன் கூடுதலாக ரூ.50,000 கோடி கடன் அடைக்கப்படும்.

* அதிக இனிப்பு, கொழுப்பு பொருட்களுக்கு 30% கூடுதல் வரி

குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை, பீட்சா, பர்கர், சான்ட்விச், ஷவர்மா போன்ற அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு கொண்ட பொருட்களுக்கு 30% சுகாதார வரி விதிக்கப்படும். மயோனஸ் மீது 25% தமிழ்நாடு சுகாதார வரி விதிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

* வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை

படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

* டிஎன்பிஎஸ்சி: நிலையான தேர்வு அட்டவணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி – 4 பணிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதத்தில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும். முதல் தொகுதி பணிகள் தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்

* பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு தனி கார்ப்பரேஷன்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியின் முன்னேற்றத்திற்காகவும், தனி கார்ப்பரேஷன் அமைக்கப்படும். அவற்றின் வாயிலாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோர் கார்ப்பரேஷன் மூலம் ரூ.3 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

* தொழில் முதலீடுகள் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டிற்கு கடந்த 4 ஆண்டுகளில் உறுதியளிக்கப்பட்ட ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளில் எவ்வளவு வந்திருக்கிறது? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும். நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை செய்யப்படும்.

* பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் நோக்குடன் அவற்றின் மேலாண் இயக்குநர்களாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தேவையான எண்ணிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க நடவடிக்கை; கட்டணம் உயர்த்தப்படாது. சென்னையில் அனைத்துப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 6,000ஆக உயர்த்தப்படும்.

* காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்

ஐந்தாம் காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ள நிலையில், அவை ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். காவலர்களுக்கு ஊதிய உயர்வு; 8 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும்

கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்ட பின், அது பூங்காவாக மாற்றப்படும். கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.

* கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடப்பாண்டில் தொடங்கும். சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். போரூர் – பூந்தமல்லி இடையே அடுத்தாண்டு போக்குவரத்துத் தொடங்கும். கோயம்புத்தூரில் 144 கி.மீ.க்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்.

* வலிமையான லோக்அயுக்தா

104. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும். முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

* பொதுச் சேவை உரிமைச் சட்டம்

தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.

* மேகதாது அணை தடுக்கப்படும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும். மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய நீர்வள ஆணையத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும். அடுத்த ஓராண்டில் அணையின் நீர்மட்டம் 152ஆக உயர்த்தப்படும்.

* வேளாண்மைத்துறைக்கு ரூ.65,000 கோடி நிதி

வேளாண் துறைக்கு 2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும். தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்றால், அதில் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க் கடன்சுமை, கொள்முதல் விலை உள்ளிட்ட உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

* அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க சட்டம்

அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும். வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும். வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும். நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.

* காவிரி பல்பொருள் அங்காடிகள் – ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுவதுபோக மீதமுள்ளவற்றை மக்களுக்கு நியாயவிலையில் விற்பனை செய்ய காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும். 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நாட்டுச் சர்க்கரை, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.  தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கித் தருவதற்காக தமிழ்நாடு வேளாண் திட்ட ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். வேளாண் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மாநில வேளாண் கொள்கை உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.

* விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

வனவிலங்குகளால் தாக்கப்படும் மனிதர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய கொள்கை உருவாக்கப்படும். விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.

சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும் 10 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

* பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பறக்கும் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 72லிருந்து 40ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பாக பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, கமூகத் தீர்வு ஏற்படுத்தப்படும். வேலூர், தஞ்சாவூர், நெல்லை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் விமானப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மின் திட்டங்களை விரைவுபடுத்த ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 7,540 மெகாவாட் மின்உற்பத்தித் திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 1 மெகாவாட் சூரியஒளி மின்நிலையம் அமைக்கப்படும்.

* மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்

அளவுக்கு அதிகமான மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், மின் கட்டணம் குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒருமுறைக்கு பதிலாசு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும். சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய நகரங்களை மையமாக வைத்து புதிய சுற்றுலாத் திட்டங்கள் வகுக்கப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இத்திட்டங்களை செயல்படுத்த 200 சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும். தமிழ்நாட்டின் சுற்றுலா வளங்கள் குறித்து வெளிநாடுகளில் பரப்புரை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை சார்பில் 2 ஆயிரம் பேருக்கு சுற்றுலா வழிகாட்டி உரிமம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும்.

* காலநிலை செயல்திட்டம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் (TN Urban Areas Climate Action Plan) உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். ‘தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம்’ (Tamil Nadu Trees Act) எனும் தனி சட்டம் இயற்றப்பட்டு, அதன் கீழ் அதிகாரமிக்க மரங்கள் ஆணையம் (Trees Authority) அமைக்கப்படும்.

தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளும் உடனடியான வரையறை செய்யப்படும். சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 மற்றும் அதன் வழிகாட்டு நெறிகள் 2020 ஆகியவற்றின் கீழ் போர்க்கால அடிப்படையில் அறிவிக்கை செய்யப்படும். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 13,604 உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள உயிரிப்பன்மை மேலாண்மைக் குழுக்கள் (BMC) முழு அளவில் செயல்படவும், அனைத்து உள்ளாட்சிகளிலும் உயிரிப்பன்மய வளத்தை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* திருநங்கையருக்கு 1% இடஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்கு தனியாக 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் திருநங்கையருக்கான இடஒதுக்கீடு கிடைமட்ட ஒதுக்கீடாக (Horizontal Reservation) வழங்கப்படும். திருநங்கையர்கள், தன்பாலின சேர்க்கையாளர்கள் ஆகியோரின் நலனுக்கான கொள்கைகள் தனித்தனியாக வகுத்து செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்துவதற்கான சட்டமுன்வரைவை விரைவாக நிறைவேற்றும்படி, மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்ளும்.

நடப்பாண்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 18 வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் ஒரு தொகை வைப்பீடு செய்யப்படும். சத்துணவு உட்கொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மாலையில் பால் மற்றும் ரொட்டி வழங்கப்படும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக கிரிமிலேயருக்கான வருவாய் வரம்பை தற்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும். 2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தமிழக அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

 

 

 

 

You may also like

Leave a Comment

seven + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi