* இருதரப்பினரும் போட்டி போட்டு சபாநாயகரிடம் மனு அளித்ததால் பரபரப்பு
சென்னை: பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு அணிகளாக செயல்படுவதால் கட்சி இரண்டாக உடைந்தது. இதன் ஒரு பகுதியாக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவின் கொறடா பதவியை பறிக்க கோரி அன்புமணி ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருதரப்பினரும் போட்டி போட்டு சபாநாயகரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணியுடனான மோதல் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் பாமகவை கைப்பற்ற போவது ராமதாசா, அன்புமணியா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இரு அணிகளாக செயல்பட தொடங்கியுள்ளதால், பாமக இரண்டாக உடைந்தது என்றே கூறலாம். எனவே, கட்சியில் தொடர்ந்து மோதல் வெடிக்க தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதற்கு முன்பாக திடீரென சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். ஆனால், ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அருள் கலந்து கொண்டார். அப்போது எம்எல்ஏ அருளுக்கு, பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பில் உத்தரவு செல்லாது என்று கூற, அருள் பதிலடி கொடுத்தார். இதனால், அன்புமணி மற்றும் அருள் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும் அருள் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கூறி அவருக்கு 12 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க அன்புமணி அறிவுறுத்தியதை அருள் ஏற்கவில்லை.
இதனால், ‘‘பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்எல்ஏ அருளுடன் பாமகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது’’ என்று அன்புமணி உத்தரவிட்டார். இது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அன்புமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் நேற்று காலை தலைமை செயலகம் வந்தனர்.
பின்னர் அவர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினர். அப்போது ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில், ‘‘பாமக எம்எல்ஏவான அருள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பாமக சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மயிலம் சிவக்குமார் எம்எல்ஏவை பாமக சட்டமன்ற கொறடாவாக நியமிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பரிந்துரைக் கடித்தத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்தனர். ஒரு கட்சியில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள்தான் ஒரு கட்சியின் கொறடாவை தேர்வு செய்ய முடியும்.
அப்படி பார்க்கும் போது பாமகவில் தற்போது 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 எம்எல்ஏக்கள் அன்புமணி ராமதாஸ் பக்கமும், 2 எம்எல்ஏக்கள் ராமதாஸ் பக்கமும் உள்ளனர். பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அன்புமணி பக்கமே உள்ளனர். இதனால் அந்த எம்எல்ஏக்கள் சொல்பவர்களே கொறடாவாக நீடிக்க முடியும். எனவே தான் அருளை மாற்றக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அன்புமணியால் நீக்கப்பட்ட பாமக எம்எல்ஏ அருள் நேற்று மதியம் சபாநாயகரை சந்திக்க தலைமை செயலகம் வந்தார்.
அவர் இல்லாத காரணத்தால், அவரது தனி செயலாளரிடம் பாமக ராமதாஸ் அளித்த கடிதம் ஒன்றை அருள் எம்எல்ஏ அளித்தார். அந்த கடிதத்தில், ‘‘தற்போதுள்ள சட்டப் பேரவையில் பாமக எம்எல்ஏக்கள் 5 பேர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஐவரில் பாமக சட்டமன்ற கொறடாவாக சேலம் மேற்கு தெகுதி எம்எல்ஏ அருள் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போதைய 16வது சட்டப்பேரவை கால அவகாசம் உள்ள வரை
இவரே தொடர்ந்து நீடிப்பார், செயல்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அருள், பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கும் கொறடாவாக உள்ளார், ஜி.கே.மணி பாமக சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார். ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் அருளை பதவியிலிருந்து நீக்க முடியும். முதலில் நான் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
எனவே அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. அருள், பாமகவின் சட்டப்பேரவை கொறடாவாகவே தொடர்வார். மேலும், அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்கியுள்ளேன். அந்த பொறுப்புகளை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறார். இப்போது என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன். கட்சியை தொடந்து நானே வழிநடத்துவேன் என்று ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* என்னை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு தான் உண்டு: அருள் எம்எல்ஏ பேட்டி
ராமதாசின் ஆதரவு எம்எல்ஏவான அருள் சபாநாயகரின் தனி செயலாளரை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாமக சட்டமன்ற கொறடாவாக நானே தொடருவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வழங்கிய கடிதத்தை சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடத்திலும், சபாநாயகரின் தனி செயலாளரிடமும் வழங்கியுள்ளேன். பாமக கட்சியின் தலைவரே ராமதாஸ் தான். 46 ஆண்டுகளாக கட்சியை தொடங்கி உழைத்த நிறுவனராக இருந்த ராமதாஸ் தான் கட்சியின் தலைவர். அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமித்துள்ளார். என்னை நீக்குவதற்கான அதிகாரம் ராமதாசிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* கட்சியின் பைலா படி பொதுக்குழுவை அன்புமணிதான் கூட்ட முடியும்
அன்புமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின்பு வெளியில் வந்த பாமக வழக்கறிஞர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது: பாமகவிலிருந்து அருள் நீக்கப்பட்டதால், சட்டமன்ற கொறடாவாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்குறிய திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை சட்டமன்ற செயலகம் செய்ய வேண்டும் என கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவுப்படி அருள் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து நிலைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பாமக சட்டமன்ற கொறடா பதவில் அருள் இருந்தார். பாமக தலைவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாமக என்பது கட்சி விதிகளின்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும். கட்சியினுடைய பொதுக்குழுவை கூட்டுவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது. ராமதாஸ் கட்சியின் நிறுவனர் தான். ஆனால் 1980ல் விதி உருவாக்கப்பட்டு 1995ல் மீண்டும் திருத்தப்பட்டு அதன் அடிப்படையில் தான் பாமக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஜனநாயக அமைப்பு என்பதால் பொதுக்குழுதான் பிரதானமானது.
எனவே, பொதுக்குழுவை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்ட கட்சியின் தலைவரான அன்புமணி, பொதுச்செயலாளராக உள்ள வடிவேல் ராமனன் ஆகியோர் தான் கூட்டமுடியும். இதில் கட்சியின் நிறுவனரின் நிலை என்ன என்பது பைலாவில் தெளிவாக உள்ளது. கட்சியினுடைய பொதுக்குழு, செயற்குழு உயர்மட்ட குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட்டு அவர் வழிக்காட்டுதல்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக பாமக 2026 ஜூன் மாதம் வரை அன்புமணி தலைவராக தொடர்வதற்கான அங்கீகாரம் என்பது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தான் எந்த முடிவையும் கட்சி மேற்கொள்ளும். பொதுக்குழுவுக்கே உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. நிறுவனர் ராமதாசை ஒரு தலைவராக உயர்ந்த ஸ்தானத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ராமதாஸ் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும் கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே, சபாநாயகரிடம் எங்களுக்காக ஏதும் செய்ய வேண்டாம் என்றும், விதிகளின்படி, சட்டத்தின்படி எதை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்றும், கட்சியின் நிலைப்பாடு கடிதம் மூலமாக அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் முடிவை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.