சென்னை: காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகள் வரிசையில் காயிதே மில்லத் பெயரில் சமூக நல்லிணக்கத்திற்காக செயல்படுபவர்களுக்கு விருது அறிவிக்க வேண்டும். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அறிவித்தது போல, காயிதே மில்லத் பெயரிலும் பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் காயிதே மில்லத். தமிழின் சிறப்புகளை வட இந்தியர்களும் உணரக்கூடிய வகையில் எடுத்துரைத்தவர்.
பாமக குடும்ப விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. ஆனால், நடுவராக ஆடிட்டர் குருமூர்த்தி சென்றிருப்பதை பார்க்க வேண்டும். தொடக்க காலத்தில் பாமக இடதுசாரிகளின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று இருந்தது. ஆனால், தற்போது வலதுசாரி அரசியலுக்கு அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இந்த பஞ்சாயத்தார்களின் முயற்சி காட்டுகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எந்த அடிப்படையில் விஜய் உதவித்தொகை கொடுப்பதை விமர்சனம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. வருகிற 14ம் தேதி வக்பு சட்டத்தை எதிர்த்து ‘மதச்சார்பின்மை காப்போம்’ பேரணியை திருச்சியில் நடத்த உள்ளோம். வக்பு சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான தாக்குதல். இந்த பேரணியில் ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.