திண்டிவனம்: பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மாற்றத்தை தொடர்ந்து மேலும் 14 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்களை நியமித்து ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் உட்கட்சி பூசல் மேலும் வலுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நடந்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக செயல்பட்டு வருகின்றனர். மாநில பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் அதிரடியாக நீக்கி அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
மேலும் கடந்த 15ம் தேததி வரை படிப்படியாக 59 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்களை புதிதாக நியமித்திருந்தார். இதற்கிடையே திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தின்போது ‘‘அப்பா என்னை மன்னித்து விடுங்கள்” என்று பொதுவெளியில் அன்புமணி பகிரங்கமாக தந்தை ராமதாசிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தலைவராக இருந்து நீங்கள் இடும் கட்டளையை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதிலிருந்து செயல் தலைவராக அவர் தொடர விரும்பவில்லை என்பதை சூசகமாக நிறுவனருக்கு வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 2 நாட்களாக வட மாவட்டம், தென் மாவட்ட பாமக செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதிய நிர்வாகிளை நான் நியமித்தது நியமித்தது தான். அனைவரும் தைரியமாக கட்சிப் பணிகளை பாருங்கள் என்று கூறியிருந்தார். அன்புமணி மன்னிப்பு கேட்டிருந்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு மேலும் 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்கள் நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை, காஞ்சிபுரம் கிழக்கு, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், தேனி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் தென்சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தைலாபுரம் வந்தனர். அவர்களிடம் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ராமதாஸ் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி காலை 11.45 மணியளவில் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து மேலும் சில புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அளித்துள்ள கடிதத்தில், அவர்களுக்கு பாமகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். நிர்வாகிகளை தொடர்ந்து ராமதாஸ் மாற்றி வருவதால் உள்கட்சி பூசல் வலுத்து வருகிறது. இதனால் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் நிரந்தரவு தீர்வு வர வாய்ப்பில்லை என்ற முடிவில் உள்ளனர்.
* கோயில்,கோயிலாக குடும்பத்துடன் சென்று சவுமியா சாமி தரிசனம்
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், சவுமியா அன்புமணி ஆன்மிக தலங்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வருகிறார். ஏற்கனவே திண்டிவனம் ராஜாங்குளம் ஆஞ்சநேயர், ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோயிலுக்கு மகள்களுடன் சென்று வழிபட்ட நிலையில் நேற்று மயிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமிகள் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு தரிசனம் செய்தார். இதில் சவுமியாவின் குடும்ப உறவினர்கள் உடனிருந்தனர்.
* புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பட்டியல்
மாவட்டச் செயலாளர்கள்:
1. கன்னியாகுமரி கிழக்கு நந்தகோபால், 2. சிவகங்கை கிழக்கு ராயர், 3. திருப்பத்தூர் கிழக்கு அன்பரசு, 4. தேனி வடக்கு எம்.பி.முத்தையா, 5. திருநெல்வேலி தெற்கு கதிரவன் ரோஜ், 6. கோவை வடக்கு ஷாஜகான், 7. கோவை மாநகரம் அருண்குமார், 8. கோவை கிழக்கு சதீஷ்குமார், 9. கோவை மேற்கு சரவணகுமார், 10. கோவை தெற்கு பழனிசாமி, 11. திருவண்ணாமலை வடக்கு கலைமணி, 12. வடசென்னை வடக்கு கே.எஸ்.கோபால், 13. ஈரோடு வடக்கு ஆண்டவன், 14. தேனி தெற்கு வீரராஜ்.
* மாவட்டத் தலைவர்கள்:
1. கன்னியாகுமரி மேற்கு அஜய், 2. திருவள்ளூர் கிழக்கு மோகனசுந்தரம், 3. திருவண்ணாமலை வடக்கு சுப்பிரமணி, 4. கோவை தெற்கு கண்ணப்பன், 5. கோவை மேற்கு அஷ்ரப், 6. கோவை கிழக்கு ரவி, 7. கோவை மாநகரம் சுப்பிரமணி, 8. கோவை வடக்கு மணிகண்டன், 9. மதுரை மாநகர் பால்ராஜ், 10. தென்காசி தெற்கு சிவராஜ், 11. தூத்துக்குடி மத்தி அந்தோணி சேகராஜ், 12. தேனி வடக்கு அருள், 13. திருப்பத்தூர் கிழக்கு சவுந்தரராஜன், 14. நாமக்கல் மேற்கு முருகேசன், 15. ராமநாதபுரம் கிழக்கு வெங்கடேசன், 16. கன்னியாகுமரி கிழக்கு ரமேஷ், 17. ஈரோடு மேற்கு ராஜா, 18. ஈரோடு வடக்கு வெங்கிடுசாமி.
இவர்களுடன் மொத்தம் 73 மாவட்ட செயலாளர்களையும், 57 மாவட்ட தலைவர்களையும் ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார். மேலும் பாமக மாநில மாணவர் சங்க செயலாளராக சென்னை ஸ்ரீராம், மாநில இளைஞர் சங்க செயலாளராக பரந்தூர் சங்கர், ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்ட அமைப்பு தலைவராக நித்தியானந்தம், அமைப்புச் செயலாளராக வெங்கடேசன், ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வெங்கடாசலம், கடலூர் மேற்கு மண்டலம் மாநில துணைத்தலைவராக ராஜி, அமைப்பு செயலாளராக அருணகிரி நாதன், திட்டக்குடி தொகுதி செயலாளராக மோனிஷா, தேனி தெற்கு மாவட்ட துணைத் தலைவராக ஜெயக்குமார் ஆகியோரை ராமதாஸ் நியமித்துள்ளார்.