திண்டிவனம்: அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாசும் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளார். வரும் 10ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் போட்டிபோட்டு நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவியில் இருப்பவர்களையே பந்தாடி வருவதால் கட்சி கலகலத்து போய் உள்ளது. இரண்டாக பிளவுபட்டு கிடக்கும் கட்சியை யார் முழுமையாக கைப்பற்றுவது என்ற கோதாவில் இருவரும் இறங்கிவிட்டனர். தைலாபுரத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது ராமதாஸ் கடுமையான குற்றசாட்டுக்களை கூறிவருகிறார். பதிலுக்கு அன்புமணியும் பனையூரில் கட்சி நிர்வாகிகளை கூட்டி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், ராமதாசால் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்கள் இப்போது அன்புமணியை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவுக்கு வந்துவிட்டனர். அன்புமணி மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி கட்சிக்காரர்களை தன்பக்கம் வளைத்து வருவதுபோல ராமதாசும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க முடிவெடுத்துவிட்டார். அன்புமணி டெல்லியில் முகாமிட்டு பாஜ தலைவர்களின் ஆதரவுடன் கட்சியை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் ராமதாஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து கட்சியை தன் பக்கம் கொண்டுவரும் நடவடிக்கையில் குதித்துவிட்டார்.
வரும் 10ம் ேததி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் எஸ்.இ.டி மகாலில் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொள்கிறார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்திற்கு பின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளார்.
வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அவரால் முன்புபோல் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியாது என அன்புமணி செய்து வரும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி வயதானாலும் தன்னால் களத்துக்கு சென்று தீவிரமாக கட்சி பணியாற்ற முடியும் என செயலில் காட்டுவதற்காகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதம் பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டை அன்புமணியின் பங்களிப்பு இல்லாமல் சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் ராமதாசுக்கு உள்ளது. கடந்த சில நாட்களாக தைலாபுரத்திலிருந்தே கட்சியை நடத்தி வந்த ராமதாஸ் தற்போது கட்சிக்காரர்களை சந்திக்க களத்துக்கே செல்ல முடிவெடுத்துவிட்டதால் அன்புமணி ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.