விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவிக்கான அதிகாரம் யாருக்கு என்பதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது தற்போது நிர்வாகிகள் நீக்கம், நியமனம் என்று இரு தரப்பிலும் உச்சக்கட்ட நிலையில் இருக்கிறது. தந்தை, மகன் மோதல் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தொண்டர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் யாரும் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத நிலையில், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட ராமதாசும், அன்புமணியும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், நான்தான் கட்சியின் தலைவர், அன்புமணி செயல்தலைவர் மட்டும் தான். 2026 தேர்தல் கூட்டணி, கட்சிக்காரர்களுக்கு சீட் தருவது போன்ற முடிவுகளை நான் தான் எடுப்பேன் என்று ராமதாஸ் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதியாக கூறியிருக்கிறார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று மதியம் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துப் பேசினார். பாஜகவை ராமதாஸ் விமர்சித்து வரும் சூழலில், செல்வப்பெருந்தகை – ராமதாஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாஸை சந்தித்து பேசிய பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ராமதாஸை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். கூட்டணி குறித்து ராமதாசுடன் பேசவில்லை. திமுக கூட்டணியில் பாமக இணைவதா என்பதை திமுகதான் முடிவு எடுக்க வேண்டும். யாருடன் எல்லாம் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சியை பாஜக உடைத்து வருகிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகதான் காரணம். பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றார்.
மேலும், தன்னுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவின் தலைவர்கள் பெரியார், அண்ணாவை பாஜக விமர்சிக்கிறது. அண்ணாவை விமர்சித்ததை கண்டித்து இன்னும் ஏன் காட்டமான அறிக்கையை அதிமுக வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்திருந்தால் நாங்கள் கூட்டணியில் இருந்தே வெளியே வந்திருப்போம். அண்ணாவை பலிகடா ஆக்கிவிட்டு அதிமுகவினருக்கு அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது?. அண்ணா பெயரை தாங்கி கொண்டிருக்கும் அதிமுகவுக்கு பாஜகவை எதிர்க்க என்ன பயம்? என அவர் கேள்வி எழுப்பினார்.