சென்னை: ராமதாசிடம் அன்புமணி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி, அமைப்பு செயலாளர் வெங்கடேசன் வரவேற்றனர். மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் டில்லிபாபு, மாவட்ட செயலாளர்கள் சேகர், ஆனந்த கிருஷ்ணன், சிவபிரகாசம், பிரகாஷ். மாவட்ட தலைவர்கள் விஜயன், ரமேஷ், பாண்டுரங்கன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகியுள்ளன. சமூகநீதி போராளி ராமதாஸ் நம்மை வழிநடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய நோக்கமே ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதற்காகத் தான். வன்னியர் சங்கத்தை தொடங்கி பல போராட்டங்களை ராமதாஸ் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. சமூக நீதி வேண்டும் என பாமகவை ராமதாஸ் தொடங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் மக்களை சந்தித்து மிகப்பெரிய பிரச்சாரம் செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சமூக நீதி மாநாடு நடத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம். கிரிமிலேயரை அடக்க வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தினோம்.
2026ல் பாமக அங்கம் உள்ள கூட்டணி ஆட்சி அமையும். நாமும் ஆள வேண்டும், 2004ல் ஆட்சியில் அங்கமாக இருந்தபோது, கல்வியில் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அது ஏற்கப்பட்டது. இல்லையேல் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என ராமதாஸ் கூறிய உடன் சோனியா அறிவித்தார். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக. வரும் ஜூலை மாதம் 25ம் தேதி தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் 100 நாட்கள் தொடங்கப்பட உள்ளது. 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ல் நடைபயணம் தொடங்க உள்ளோம். கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை விடப்போவதில்லை. 1700 ஏக்கர் நிலத்தில் அறிவுசார் நகரம் அமைக்க விடமாட்டோம். திருவள்ளூருக்கு மாற்றாக தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்றுங்கள்.
பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வைப்போம். மேலும், தமது தந்தையான ராமதாஸ் மன நிம்மதியுடன் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் 100 ஆண்டுக்கு மேல் வாழ வேண்டும். மகனாக தம்முடைய கடமை. தமது தந்தையான ராமதாசுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தவறு இருந்தால் தந்தையான ராமதாஸ் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் உங்களுக்கு சுகர், பிபி இருப்பதால் அதிகமாக டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். நீங்கள் சொல்வதை மகனாக கட்சியின் தலைவனாக செய்து காட்டுகிறேன். தன் மீது வருத்தப்படவோ கவலைப்பட கோபப்படவோ வேண்டாம்.
45 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்த கட்சியை உங்கள் கனவுகளை நினைவாக்குவேன். தேசிய தலைவரான நீங்கள் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார், என பேசினார். பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் நடைபெற்று வரும் மோதல் நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில் அன்புமணி தனது தந்தையிடம் மாவட்ட பொதுக்குழு மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பது பாமக கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது.
இதில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.