* திண்டிவனத்தில் நாளை செயற்குழு ராமதாஸ்
* பனையூரில் நாளை முக்கிய ஆலோசனை அன்புமணி
திண்டிவனம்: பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும், பாமகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயரை ராமதாஸ் நீக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக தொடர் நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அன்புமணியை வெளிப்படையாக விமர்சித்த பிறகு இந்த மோதல் மேலும் பூதாகரமாகி சட்டமன்ற கொறடாவை மாற்றுவதற்கு மனு கொடுக்கும் வரை சென்றதால் கட்சி இரண்டாக உடைந்து உள்ளது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் பாமகவின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். தலைமை நிர்வாக குழுவில் ராமதாஸ், அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன், திலகபாமா, பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன், முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, அரங்கவேலு, செந்தில், திருக்கச்சூர் ஆறுமுகம், பசுமைதாயகம் அருள், சிவப்பிரகாசம், வக்கீல் பாலு, கவிஞர் ஜெயபாஸ்கரன், நெடுங்கீரன், வெங்கடேஸ்வரன், டாக்டர் வைத்தியலிங்கம் ஆகிய 19 பேர் இருந்தனர். இவர்களில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான வடிவேல் ராவணன், திலகபாமா, வக்கீல் பாலு, கார்த்திக், செந்தில், பசுமை தாயகம் அருள் ஆகியோரை தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார், மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, முன்னாள் எம்.பி. துரை, இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியை இரண்டாக உடைத்த அன்புமணி மீது கடும் கோபமாக பேசிய ராமதாஸ், ‘கட்சியை நான் தொடர்ந்து வழி நடத்துவேன். நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்யுங்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நான் உங்களுடன் இருக்கிறேன். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலை செய்யுங்கள்’ என கூறினார்.
இதன்பின் பழைய 19 பேர் கொண்ட தலைமை நிர்வாக குழுவை கலைத்துவிட்டு 21 பேர் கொண்ட புதிய தலைமை நிர்வாக குழுவை ராமதாஸ் அறிவித்தார். பழைய குழுவில் இருந்த அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான வடிவேல் ராவணன், திலகபாமா, வக்கீல் பாலு, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், செந்தில், பசுமை தாயகம் அருள் ஆகியோர் நீக்கப்பட்டனர். புதியதாக ராமதாஸ் அறிவித்த 21 பேர் கொண்ட தலைமை நிர்வாக குழுவில், பாமக நிறுவனர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், பு.தா.அருள்மொழி, முரளி சங்கர், சையது மன்சூர் உசேன், துரை, ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், பேராசிரியர் தீரன், அருள் எம்எல்ஏ, நெடுங்கீரன், கவிஞர் ஜெயபாஸ்கரன், முத்துக்குமரன், வைத்திலிங்கம், அன்பழகன், பரந்தாமன், ம.க.ஸ்டாலின், கரூர் பாஸ்கரன், சுஜாதா கருணாகரன், சரவணன் உள்ளனர்.
சட்டமன்ற கொறடாவாக சிவகுமார் எம்எல்ஏவை பரிந்துரை செய்து சபாநாயகர் அப்பாவுவிடம் பாமக சார்பில் அன்புமணி கடிதம் வழங்கியதால் அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் அன்புமணிக்கு தலைமை நிர்வாக குழுவில் இடம் அளிக்காமல் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் திண்டிவனத்தில் நாளை (8ம் தேதி) நடக்கும் செயற்குழுவில் மேலும் சில அதிரடி மாற்றங்களை ராமதாஸ் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் அன்புமணியை முழுமையாக கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு தன் முழு கட்டுப்பாட்டுக்குள் பாமக கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இறுதி மூச்சு உள்ளவரை நான் தான் தலைவர் என ராமதாஸ் அறிவித்து அதற்கேற்றார்போல் காய்களை நகர்த்தி வருகிறார். இன்னும் 10 மாதத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளார். தற்போது தேர்தல் கமிஷனுக்கு சென்று சின்னத்தை தனது தரப்புக்கு கொடுக்க ராமதாஸ் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார். இந்நிலையில் அன்புமணி நீக்கப்பட்டது குறித்து ராமதாசிடம் கேட்டபோது, ‘அப்படியா, அப்படி ஏதும் நான் யாரையும் நீக்கவில்லை. இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்கிறேன்’ என்று மழுப்பலாக பதில் அளித்தார்.
அன்புமணியை தலைமை நிர்வாக குழுவில் இருந்து நீக்கியதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் ராமதாஸ், அன்புமணியின் பெயரை நேற்று தவிர்த்துள்ளார். இதற்கு முன்னதாக வழங்கிய அனைத்து கடிதங்களிலும் அன்புமணி செயல் தலைவர் என்று குறிப்பிட்டு நியமன ஆணைகள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அன்புமணியை நீக்கியதை வெளிப்படையாக ராமதாஸ் நியமன கடிதங்கள் மூலம் காட்டியுள்ளார். அதோடு பாமகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயரை ராமதாஸ் நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார்.
* அன்புமணி ஆலோசனை
ராமதாசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் நிலை குலைந்த அன்புமணி விரைவில் தனது ஆதரவாளர்களை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளார். அவர் நாளை(8ம் தேதி) பனையூரில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பாமகவிலிருந்து நீக்கப்பட்டால் புதிய கட்சியை துவங்குவதா அல்லது பாஜ ஆதரவுடன் பாமகவை கைப்பற்றி தனி அணியாக தொடர்ந்து செயல்படுவதா என்பது குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், திண்டிவனத்தில் நாளை நடக்கும் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு பாமகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஆட்சிக்கு வந்த நடிகர்கள் அனைத்தையும் கெடுத்தனர்: பு.தா.அருள்மொழி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பாமக தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில தலைவர் புதா. அருள்மொழி கலந்து கொண்டார். கூட்டத்தில், வரும் 10ம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. பின்னர் பு.தா.அருள்மொழி கூறுகையில், ‘நடிகர்களை நாடாள வைத்து பார்த்தவர்கள் நாம். எம்ஜிஆரை தொடர்ந்து ஜெயலலிதா முதல்வரானார், அதன் பின்னர் விஜயகாந்த் முதல்வராக வேண்டுமென நினைத்தார். ஆனால் நடக்கவில்லை, தற்போது விஜய் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால், ஏற்கனவே ஆட்சிக்கு வந்த நடிகர்கள் அனைத்தையும் கெடுத்து விட்டார்கள். அவர் புதிதாக ஒன்றும் கெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. பாமகவில் தந்தை, மகன் ஆகியோர் இணைந்து விடுவார்கள்’ என்றார்.
* அன்புமணி நீக்கமா?: ஜி.கே.மணி மறுப்பு
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேற்று சந்தித்த பின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘என்று தனியும் எங்கள் தாகம், எப்போது நீங்கும் எங்கள் வேதனை, எங்கள் ஒற்றுமை, வளர்ச்சி, இது தான் பாமகவில் உள்ளவர்களின் வேதனையாக உள்ளது. பாமக நிர்வாக குழுவில் அன்புமணியை நீக்கவில்லை, நீக்கப்பட்டதாக தவறான செய்தியை சொல்லி இருக்கிறார்கள். நிர்வாக குழுவில் உள்ளவர்கள் பட்டியலை ராமதாஸ் வெளியிடுவார். திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் 8ம் தேதி (நாளை) நடைபெறும் செயற்குழு கூட்டத்துக்கு அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.