திண்டிவனம்: பாமகவில் மேலும் 30 மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் ராமதாஸ் இறங்கி உள்ளார். பாமகவில் தொடரும் இந்த மோதல் விவகாரத்தால் அன்புமணி ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 29ம் தேதி பேட்டியளித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமதாஸ், அன்புமணி மோதலை தொடர்ந்து, கட்சியில் இருந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். நிர்வாகிகள் இல்லாத மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். ராமதாசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அன்புமணி ஆதரவாளர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.
இதை தடுப்பதற்காக கட்சியின் முன்னணி நிர்வாகிகள், ராமதாசுடன் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் பாமகவிலுள்ள அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
இன்று திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜை நீக்கியும், தெற்கு மாவட்ட செயலாளராக சுரேஷையும், தலைவராக முத்துராமலிங்கத்தையும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மேற்கு மாவட்ட தலைவராக மகாராஜன் என்பவரை நியமனம் செய்துள்ளார்.இதுமட்டுமல்லாமல் மேலும் 30 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களை மாற்ற பட்டியல் தயார் செய்து வருகிறார். 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் அவர் நியமனம் செய்து வருகிறார். இதனால் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அன்புமணியால் ஓரங்கட்டப்பட்டவர்கள் அனைவரும் தைலாபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த காசிநாதன், மகளிர் சங்க மாநில தலைவர் சுஜாதா கருணாகரன், வன்னியர் சங்க மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா மற்றும் வன்னியர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் தானையம்மா ஆகியோர் இன்று ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 50 நிர்வாகிகளும் வேலூர் மாவட்டத்திலிருந்து 10 நிர்வாகிகளும் ராமதாசை சந்தித்து பேசினர். இந்த நிர்வாகிகள் மாற்றத்திற்கு பின்பு ராமதாஸ் தலைமையில் தனியாக மாநில பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.