மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள். அதனை மருத்துவ மொழியில் PMS (Pre Menstrual syndrome) என்று குறிப்பிடுவார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலி ஏற்படுதல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகள். அதனால்தான் மாதவிடாய் வரும் முன் சில பெண்கள் எதற்கெடுத்தாலும் ேகாபப்படுவார்கள். சிலர் சாதாரண விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவார்கள். ஒரு சிலர் சோர்வுடன் சரியாக தூங்காதது போல் இருப்பார்கள். இவை அனைத்தும் PMSன் அறிகுறிகளாகும்.
இந்தப் பிரச்னைக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் PMSன் பாதிப்பு அதிகமானால் அவர்களுக்கு PMDD (Pre Menstrual Dysphoric Disorder) பிரச்னையாக மாற வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இது கொஞ்சம் அபாயகரமானது. இந்த பாதிப்புள்ள பெண்கள் தங்களின் கணவரிடம் வன்முறையாக செயல்படுவார்கள். சில சமயம் அவர்களை அடிக்கவும் தயங்கமாட்டார்கள்.
கணவரோடு ஏற்படும் சின்னப் பிரச்னையும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரியளவு சண்டையாக மாறவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடன் அன்றாடம் ஏதாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவார்கள். இந்த பாதிப்புகள் ெதாடரும் பட்சத்தில் அவர்கள் கடைசியாக தற்கொலை மேற்கொள்ளவும் தயங்கமாட்டார்கள். மேலும் பல கொடூரமான வன்முறையிலும் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயல்பாகவே மாதவிலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களிடம் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை காண முடியும். அந்த நிலை எல்லை தாண்டும் போது, கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போடுவது, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு, தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை போன்ற மனநிலை ஏற்பட்டு அவர்கள் PMDD பாதிப்பிற்கு தள்ளப்படுகிறார்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையை பற்றி சிந்தித்தல் போன்றவையும் ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்கள் ஏற்கனவே மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கான ஆலோசனை முறைகளை மேற்கொள்வது அவசியம்.
PMS பிரச்னை இருக்கும் 30% பெண்களில் 4% பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து PMDDயாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் ‘சிரோட்டோத்தின்’ அளவு குறையும். இந்தக் குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…
ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். PMDD பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றத்தன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகள் பெறலாம். சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்புதான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்துவிட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. இந்த, சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
தொகுப்பு: பிரியா மோகன்