மும்பை: மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததே சிலை இடிந்து விழுந்ததற்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மகாராஷ்டிராவை ஆண்ட சத்ரபதி சிவாஜி கடற்படையை வைத்திருந்தார். இவர் சிந்துதுர்க் மாவட்டத்தில் மால்வான் என்ற இடத்தில் ஒரு கடல்கோட்டையை கட்டியிருந்தார். இது ராஜ்கோட் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு இந்த கோட்டையில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே சூறை காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு 35 அடி உயர பிரமாண்ட சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து, இடிந்து விழுந்து விட்டது.
சிலை இடிந்து விழுந்ததற்கு மாநில அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மாநில அரசு எந்த பணியையும் நேர்த்தியாக செய்வதில்லை. வேலையின் தரம் பற்றி மாநில அரசு கவலைப்பட்டதே இல்லை. சிலை விழுந்ததற்கு இதுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. ஆனால், பலத்த காற்று வீசியதால் சிலை உடைந்துவிட்டதாகவும், விரைவில் புதிய சிலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.