புதுடெல்லி: மணிப்பூர் தீப்பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல என்று ராகுல்காந்தி கூறினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. முன்னதாக எதிர்க்கட்சிகளின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன். அவர் நகைச்சுவையாகப் பேசுகிறார், சிரிக்கிறார், கேலி செய்கிறார். பிரதமர் ஒரு வரி சொல்வார், பா.ஜ.கூட்டணி கட்சி எம்பிக்கள் உற்சாக கோஷம் போடுவார்கள். மணிப்பூர் மாநிலம் தீப்பிடித்து நான்கு மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார் போலும். மணிப்பூர் போன்ற ஒரு முக்கிய பிரச்னையில் இப்படி நடந்து கொள்வது ஒரு பிரதமருக்கு அழகல்ல.
மணிப்பூர் பற்றிஎரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால், மணிப்பூரில் நாங்கள் பார்த்ததை வேறு எங்கும் பார்க்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை நான் தற்போது சொல்ல வேண்டும். நாங்கள் மெய்டீஸ் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றபோது, அந்த இடத்திற்கு குக்கி சமூக மக்களை அழைக்காதீர்கள் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. எனது பாதுகாப்பு வீரர்களாக இருந்தாலும் அவர்கள் அங்கு வந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என கூறினார்கள். இதே நிலைதான் குக்கி மக்கள் வசிக்கும் இடத்திலும் இருந்தது. மணிப்பூர் குக்கி, மெய்டீஸ் என இரண்டாக பிரிந்திருக்கிறது.
அது ஒரு மாநிலமாக இல்லை. இதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். மணிப்பூரில் நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதமர் நினைத்திருந்தால் முடிந்திருக்கும். அதற்கான பல்வேறு கருவிகள் அவரிடம் உள்ளன. ஆனால், பிரதமர் தனது கடமையைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் அவர் சிரித்து சிரித்துப் பேசுகிறார். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும்; அங்குள்ள மக்களோடு பேசி இருக்க வேண்டும். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் வேண்டுமென்றே தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் என்பதுதான் எனது முடிவு. அவர் ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.
மணிப்பூரில் பெண்களும் குழந்தைகளும் செத்து மடிகிறார்கள், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் நடுவில் அமர்ந்து சிரிக்கிறார், இது பாஜவின் அரசியலால் நடந்தது. பிரித்தாளும் ெகாள்கையால் நடந்தது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்றனர் என்ற எனது கருத்து வெற்று வார்த்தைகள் அல்ல. நாட்டில் வன்முறை ஏற்படும் போது, இரண்டு மணி நேரம் கேலி செய்வதில் ஈடுபடுவது பிரதமருக்கு ஏற்புடையதல்ல. முதன்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து பாரத மாதா என்ற வார்த்தைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளை அவமதித்துள்ளது.
மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டது உண்மைதான். மணிப்பூரில் நடக்கும் முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய ராணுவத்திற்கு இரண்டு நாட்கள் போதும். ஒரு நபர் பிரதமரானால், அவர் அரசியல்வாதியாக இருப்பதை நிறுத்திவிட்டு, மக்கள் குரலின் பிரதிநிதியாக மாற வேண்டும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் கட்சித் தலைவராகப் பேசாமல், இந்திய மக்களின் கனத்தை வைத்து பிரதமர் பேச வேண்டும். ஆனால் மோடியைப் பார்ப்பது சோகமாக இருக்கிறது. உண்மை என்னவென்று பிரதமருக்குப் புரியாததால் வருத்தமாக இருக்கிறது. அவர் பிரதமர். அவர் அனைவரின் பிரதிநிதி, அவர் எனது பிரதிநிதி.
பிரதமர் காங்கிரசை பற்றி இரண்டு மணி நேரம் பேசுவதையும், எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசுவதையும், எதிர்க்கட்சி கூட்டணியின் பெயரைப் பற்றி கேலிக்குரிய கருத்துக்களைக் கூறுவதையும் பார்ப்பது உண்மையில் ஒரு இந்தியனுக்கு நியாயம் செய்யாது. காங்கிரஸ் அல்லாத பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். வாஜ்பாயை பார்த்திருக்கிறேன், தேவகவுடாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தியாவின் பிரதமர் என்றால் என்ன என்பது குறித்து மோடியின் மனதில் தவறான புரிதல் உள்ளது. மணிப்பூரில் பாஜவால் இந்தியா படுகொலை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
* ராகுலின் பேச்சில் இருந்து ‘பாரத் மாதா’ நீக்கப்படவில்லை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது,’ மக்களவை 45 சதவீதமும், மாநிலங்களவை 63 சதவீதமும் செயல்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 23 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ராகுல்காந்தி பேச்சில் இருந்து ‘பாரத் மாதா’ என்ற வார்த்தை நீக்கப்படவில்லை.
நாடாளுமன்ற பேச்சுக்கு மாறாக இருந்தவை அகற்றப்பட்டுவிட்டன. இன்று ராகுல் காந்தி மன சமநிலையை இழந்துவிட்டார் என்பது தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் எதிர்க்கட்சிகள் பாரத மாதா என்று பேசுவதும், பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை எழுப்புவதும் நல்ல அறிகுறி. இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி பாரத மாதா என்ற வார்த்தைகளை பயன்படுத்தாது’ என்று கூறினார்.