* விக்ரம் லேண்டர் இறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயர்
பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய ஆக.23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதி’சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டிய பின்னர் பிரதமர் மோடி அறிவித்தார். நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, கடந்த 23ம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. உலகில் எந்த நாடும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
இந்நிலையில், சந்திரயான்-3 நிலவில் தடம் பதித்த தருணத்தில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கிரீஸ் நாட்டிற்கு சென்று, தனி விமானம் மூலம் நேற்று நாடு திரும்பினார். பொதுவாக டெல்லிக்கு செல்லும் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட, நேரடியாக பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்திற்கு நேற்று காலை 6 மணிக்கு வந்திறங்கினார். விமான நிலையத்தில் 30 நிமிடம் ஓய்வு எடுத்த பிறகு, விமான நிலையத்தின் வெளியே கூடி இருந்த பொதுமக்கள் முன் பிரதமர் பேசும் போது, ‘‘நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் செலுத்தி சாதனை படைத்த நமது இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடே கொண்டாடுகிறது. நமது விஞ்ஞானிகளின் சக்தி, சாமர்த்தியம், அறிவாற்றல் ஆகியவற்றை உலக நாடுகள் பாராட்டி மகிழ்கிறது.
அந்த வகையில் நானும் நேரில் சந்தித்து பாராட்டுவதற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பெங்களூரு வந்துள்ளேன். நான் சிரமம் இல்லாமல் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க பாதுகாப்பு மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ள மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி. கே. சிவகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். பின் பழைய விமான நிலைய சாலை, மகாத்மா காந்தி சாலை, ராஜ்பவன் சாலை, மேக்ரி சாலை வழியாக பீனியா பகுதியில் உள்ள இஸ்ரோ மையம் சென்றார். பீனியா பகுதியில் ஒரு கி.மீட்டர் தூரத்தில் தேசிய கொடியுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சாலையில் நின்று இருந்தவர்களை பார்த்து மகிழ்ச்சியாக கை அசைத்தார். இஸ்ரோ மையம் சென்ற பிரதமரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்பட இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். பிரதமருக்கு விண்கலத்தின் மாதிரியை திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வழங்கினார். அதை தொடர்ந்து சந்திரயான்- 3 வெற்றி குறித்து விஞ்ஞானிகளிடம் விவரம் பெற்றார். சந்திரயான்- 3 திட்டம் வெற்றி பெற்றது எப்படி என்று பிரதமருக்கு திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெளிவாக விளக்கினார். மேலும் சந்திரனை ஆய்வு செய்வதில் சாதனை படைத்தது போல் சூரியனை ஆய்வு செய்யும் சூரியான் திட்டம் செயல்படுத்துவது குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிவசக்தி பாயின்ட்: அதை தொடர்ந்து விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி பேசும் போது, ‘‘இஸ்ரோ செய்துள்ள சாதனையால் உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் தன்னிறைவு பெற்று வருகிறோம். இதற்கு நமது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் முயற்சி, உழைப்பு காரணம்.
விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சாதித்து காட்டும் நாடுகள் விரல் விட்டு எண்ணும் வகையில் உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்ட நிலையில் நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டி விட்டனர். இந்த சாதனை படைத்த விஞ்ஞானிகளை 140 கோடி மக்கள் சார்பில் வாழ்த்தி பாராட்டுகிறேன். குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் கொடுத்துள்ள உழைப்பு அளப்பரியது. நாம் மேற்கொண்டுள்ள சாதனையை நினைவு கூறும் வகையில் சந்திரயான்- 2 கால் பதித்த இடத்திற்கு மூவர்ண கொடி முனையம் என்றும் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கால் பதித்த இடத்திற்கு ‘சிவசக்தி முனையம்’ என்று பெயர் சூட்டுகிறேன். மேலும் விக்ரம் லேண்டர் கால் பதித்த நாளான ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகவும் ஆகஸ்ட் 26ம் தேதியை தேசிய செயற்கைக்கோள் தினமாக கொண்டாடப்படும். மேலும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசு இணைந்து பயிற்சி முகாம் நடத்தப்படும்’’ என்றார்.
டெல்லி மக்களே மன்னித்து விடுங்கள்
பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடி அங்கு அளித்த பேட்டியில், ‘‘டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் 14 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்க உள்ளனர். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்த டெல்லிவாசிகளுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. நாட்டின் நற்பெயருக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாநாட்டிற்காக வரும் செப்டம்பர் 5 முதல் 15ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லி மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
தொந்தரவு செய்ய விரும்பவில்லை
பொதுவாக பிரதமர் மோடியை வரவேற்க மாநில ஆளுநர், முதல்வர் நேரடியாக விமான நிலையத்திற்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று பிரதமர் மோடியை வரவேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் யாரும் வரவில்லை. அரசு உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘கிரீஸ் நாட்டின் ஏதென்ஸிலிருந்து வந்ததால் பெங்களூருவை சென்றடையும் சரியான நேரத்தை குறிப்பிட முடியவில்லை. மேலும் அதிகாலையில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்பதால் தான் அவர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தினேன்’’ என்றார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் இதுதொடர்பாக தெளிவுபடுத்தினார். சாம்ராஜ்நகரில் இதுதொடர்பாக பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘‘பிரதமர் மோடியை வரவேற்க முதல்வரும் நானும் தயாரானோம். ஆனால் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வர வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியதால் தான் விமான நிலையத்திற்கு செல்லவில்லை’’ என்றார்.