ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்தவர் சிவா. கட்டுமான நிறுவன சூபர்வைசர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் ஆதித்யா (17). குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு புறப்பட்டு சென்றவர், சாதாரண உடையில் பள்ளி அருகே மாலையில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் ஆதித்யாவை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோவை பார்த்தோம்.
அதில், ஆதித்யாவை அவர்கள் அடித்துக்கொன்றது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம், கைது செய்யாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்வேன் என தந்தை கூறினார். இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மாணவன் சாவை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஆதித்யா, சக மாணவர்களால் தாக்கப்பட்டதும், அதனால் அவர் இறந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.