சென்னை: பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசுப் பள்ளிகள் மறுக்கின்றன. இதில், அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை; பிளஸ் 1 சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அணுகும் போது, அவர்களது மதிப்பெண்களை பார்த்து, நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உயர் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலை அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. பள்ளி மாணவர் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தனியார் பள்ளிகள் சுய லாபம் தேடும் முயற்சியில் பரபரப்பான விளம்பரங்களை வெளியிட்டு, உயர் மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே சேர்த்து வரும் முறை அரசுப் பள்ளிகளை தொற்றிக் கொள்ளும் முன்பு தமிழ்நாடு அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை உயர் மதிப்பெண் பெறும் அளவில் உயர்த்துவதில் தான் கற்பிக்கும் திறன் மதிப்பிட வேண்டியது அவசியமாகும். வெறும் 100 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கை மட்டும் கொண்டு கற்பிக்கும் திறனை தீர்மானிக்கக் கூடாது என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டி, பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு பள்ளிகளை அணுகும் மாணவ, மாணவிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.