அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ரூ.12.5 கோடியும், 3ம் இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ. 7 கோடியும், 4ம் இடம் பிடித்த குஜராத் டைடன்ஸ் அணிக்கு ரூ. 6.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
ஐபிஎல் போட்டி துவங்கப்பட்ட முதல் ஆண்டான, 2008ல், வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற அணிக்கு ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு, ரூ. 2.4 கோடியும் பரிசாக கிடைத்தது. 18 ஆண்டுகளில் இந்த பரிசுத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடந்த மைதானங்களில், டெல்லியின் அருண் ஜெட்லி மைதானம் சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானத்திற்கான விருதை பெற்றது. அந்த விருதும், பரிசுத் தொகை ரூ. 50 லட்சமும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் (டிடிசிஏ) வழங்கப்பட்டது. இந்த மைதானத்தில் 7 போட்டிகள் நடந்தன.