நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக மாறி உள்ளது. தற்போது சென்னை எழும்பூர் – கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.
டவுன் ரயில் நிலையத்தில், தற்போது விரிவாக்க பணிகளும் நடக்கின்றன. தற்போது டவுண் ரயில் நிலையத்தை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
டவுண் ரயில் நிலையம் வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி-5 பிரிவு ரயில் நிலையமாகும். ஆண்டுக்கு சராசரியாக 2.50 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த ரயில் நிலையத்தின் வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வரும் காலங்களில் நாகர்கோவில் டவுண் வழியாக அதிக ரயில்கள் இயக்க ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக ரயில்கள் இயக்கும் போது வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் ரயில்வே துறை டவுன் ரயில் நிலையத்தில் பல்வேறு பயணிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை படிப்படியாக செய்து வருகிறது.
தற்போது இங்கு 3 நடைமேடைகள் உள்ளன. இதில் முதல் பிளாட்பாரத்தில் ரயில்கள் வராது. 2 மற்றும் 3 வது நடைமேடையில் தான், ரயில்கள் வரும். இதனால் முதல் பிளாட்பாரத்தில் இருந்து பயணிகள் லக்கேஜ் உடன் நடைமேடை படிக்கட்டு வழியாக ஏறி இறங்கி வர வேண்டி இருந்தது.
இதனால் மாற்று திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், வீல் சேரில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே துறை மின் தூக்கியை (லிப்ட்) நிறுவ முடிவு செய்தது. நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகளிலும் தலா ஒரு மின்தூக்கி வீதம் அமைக்க முடிவு செய்து பணிகள், தொடங்கின.
நீண்ட காலத்துக்கு பின் பணிகள் நிறைவடைந்து தற்போது லிப்ட் இயங்க தொடங்கி இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் 2 வது பிளாட்பாரம், 3 வது பிளாட்பாரத்தில் மேற்கூரைகள் நீளமாக இல்லாததால், பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.வெயில், மழையில் நனைந்தவாறு, ரயில் ஏறுவதற்கு காத்திருந்தனர்.
எனவே 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தில் மேற்கூரை நீளத்ைத அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் தற்போது 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தில் மேற்கூரை நீளத்தை அதிகரிக்கும் பணிகள் நடக்கின்றன. 2 வது பிளாட்பாரத்தில் மேற்கூரைக்கான கம்பிகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் மேற்கூரைக்கான சீட் அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.