விவசாயிகளுக்கான ஸ்மார்ட் தோழனாக செயல்படுகிறது பிளான்டிக்ஸ் செயலி Plantix – Your Crop Doctor) என்பது விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்தர வேளாண் உதவிச் செயலி. இந்த செயலி Android, iOS இரண்டிலும் கிடைக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த செயலி, இந்திய விவசாயிகளிடையே தீவிரமாகப் பரவி வருகிறது. மேலும் இது வீட்டுத் தோட்டம், காய்கறிகள் உள்ளிட்டவை பயிரிடுவதிலும் ஏராளமான ஆலோசனைகளையும், முறைகளையும் வழங்குகிறது. பயிர் களில் நோய், பூச்சி தாக்குதல், சாம்பல், இலை வாடல், பழுத்து விழுதல் போன்ற பயிர்ப் பிரச்னைகளை புகைப்படமாக எடுத்துப் பதிவேற்றினால், இந்தச் செயலி அதைச் சில வினாடிகளில் அறிந்து, துல்லியமாக நோய் பெயர் மற்றும் காரணம் சொல்கிறது.
தீர்வு மற்றும் பரிந்துரை
நோய் அல்லது பூச்சி தாக்குதலுக்கான மருத்துவ வழிகள், வேதியியல் மற்றும் இயற்கை மருந்து பரிந்துரைகள், எந்த பூச்சிக்கொல்லி, எந்த உரம் எப்போது பயன்பட வேண்டும் என்பதையும் விரிவாக கூறும்.
காலநிலைக் கணிப்பு
உங்கள் இருப்பிடம் அடிப்படையில், நாளை மற்றும் அடுத்த சில நாட்களில் இருக்கும் மழை, வெப்பநிலை, காற்று நிலை போன்ற தகவல்களையும் இந்தச் செயலியில் பெறலாம் .
பயிர் பராமரிப்பு வழிகாட்டி:
விதைத்திடும் தருணம் முதல் அறுவடை வரை, என்ன செய்ய வேண்டும், எப்போது உரம் கொடுக்க வேண்டும், எந்த நிலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கொடுக்க வேண்டும், எப்போது நச்சுத் தாக்கல் அதிகம் இருக்கும் போன்ற அறிகுறிகள் மற்றும் ரீமைண்டர்கள் தருகிறது.
விவசாயச் சமுதாய உதவி
Plantix -ல் உள்ள Community Forum-ல், விவசாயிகள் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம். இது உடனடி சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த இடமாக உள்ளது.
நிலத்தடி தரம், மண்ணின் தேவைகள்
மேம்படுத்தப்பட்ட பிரீமியம் செயலியில் மண்ணின் தரம் குறித்தும், அதற்கேற்ப எந்த பயிர் உகந்தது என்பதைச் சொல்லும் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.தமிழ் உட்பட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் உதவிகள் பெறலாம். 30+ பயிர்களுக்கு மேல் சேவைகள்.
– எஸ். விஜயலட்சுமி