*வேளாண் அதிகாரிகள் தகவல்
அணைக்கட்டு : மெஷின் மூலம் நெல் நாற்று நடவு செய்தால் ரூ.4 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.
அறுவடைக்கு மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாற்று நடுவதற்கு ஆட்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, தற்போது வேளாண்மை பொறியியல் துறை மூலம் நெல் நடவு மெஷின்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெளியில் மெஷின்களை வாடகைக்கு எடுத்து நெல் நாற்று நடவு செய்தால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நெல் நடவு மெஷினை வெளியில் வாடகைக்கு எடுத்து வந்து நிலத்தில் மெஷின் மூலம் நடவு பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு குறுவை சாகுபடி திட்டத்தில் ரூ.4 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு அணைக்கட்டு வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார், துணை வேளாண்மை அலுவலர் புனித்ராஜ், உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி மற்றும் வேளாண் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், நாற்று நடும் மெஷின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன், ஒன்றிய திமுக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வட்டார வேளாண்மை அலுவலர்கள் கூறுகையில், மெஷின்கள் மூலம் குறைந்த நேரத்தில் நெல் நடவு பணியை முடித்துவிடலாம். மெஷின் மூலம் நடவு பணியை மேற்கொண்டால் நாற்றுகள் இடையே சரியான இடைவெளி இருக்கும். களை எடுக்கும்போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கூடுதலான விளைச்சல் இருக்கும். மெஷின்களை வெளியில் வாடகைக்கு எடுத்து நடவு பணியில் ஈடுபட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என்றனர்.