அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் கருப்பு பெட்டியை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் விமான விபத்து பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது; மேலும் 319 உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மறக்க முடியாத பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு குறித்த முக்கிய பாடங்களை விட்டுச் சென்றுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு சர்கி தாத்ரி வான்வெளி மோதல், இந்தியாவின் மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியது; இந்த சம்பவத்தில் இரு விமானங்கள் மோதி 349 பேர் உயிரிழந்தனர். கடந்த 1988ல் அகமதாபாத் அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 133 உயிர்கள் பறிபோனது. இதற்கு மோசமான பயிற்சி, தொழில்நுட்பக் கோளாறு ஆகியன காரணங்களாக அமைந்தன. கடந்த 2020ல் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுதளத்தைத் தாண்டி பள்ளத்தில் விழுந்ததால் 21 பேர் உயிரிழந்தனர்; இந்த விபத்து மழை மற்றும் ஓடுதள பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. இத்தகைய சம்பவங்கள் யாவும் விமானப் பராமரிப்பு, பயிற்சி மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
ஆனால் கடந்த 12ம் தேதி அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது. இவ்விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்; இதில் 241 பேர் உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானத்தில் இருந்த 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் வெடித்ததால் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது; இதனால் மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. நேற்று முன்தினம் இரவு வரை 265 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மீட்புக் குழுவினர் நேற்று விமானத்தின் கருப்பு பெட்டியை, மருத்துவக் கல்லூரியின் மாணவர் உணவு அரங்கின் மாடியில் கண்டறிந்தனர்; இந்த விபத்தில் மேலும் 29 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது. இவற்றில் 33 பேர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான பின்னர், அந்த விபத்தில் சிக்கிய மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், அவர்களின் குடும்பத்தினர், பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த விபத்தில் 319 உடல் பாகங்கள், முழுமையான மற்றும் பகுதியளவு எச்சங்களாக மீட்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன; ஏனெனில் பெரும்பாலான உடல்கள் எரிந்து அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளில் மூன்று மருத்துவர்கள், ஒரு மருத்துவரின் கர்ப்பிணி மனைவி, எம்பிபிஎஸ் மாணவர் ஜெய் பிரகாஷ் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். விமான விபத்து விசாரணைப் பணியகம் கருப்பு பெட்டியின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியதால், இது விபத்தின் காரணத்தை (தொழில்நுட்பக் கோளாறு, மனிதத் தவறு, அல்லது வேறு காரணங்கள்) அறிய முக்கிய தடயங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உட்பட அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. அகமதாபாத் காவல்துறை வியாழன் மதியம் 1.44 மணிக்கு விமான விபத்து தொடர்பாக மேகனி நகர் காவல் நிலையத்தில் தற்செயல் மரண வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.