புதுடெல்லி: விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து உயர்மட்டக்குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ராம்மோகன், ‘‘விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப்பெட்டி வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது. கருப்புபெட்டியை டிகோட் செய்வதன் மூலமாக விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவரும்.
நாட்டில் கடுமையான விமான பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் வலுவான நெறிமுறைகள் உள்ளன. பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். விமான விபத்தை சுற்றியுள்ள எந்தவொரு கோட்பாடும் பகுப்பாய்வு செய்யப்படும். உள்துறை செயலர் தலைமையிலான உயர்மட்ட குழுவானது திங்களன்று (நாளை)கூட்டத்தை நடத்தும். மேலும் அந்த குழுவானது மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். விமான விபத்துக்கு பின் போயிங் 787 விமானங்களின் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை குழுவின் அறிக்கையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
* விமான விபத்தை வீடியோ பதிவு செய்த சிறுவன் சாட்சியாக சேர்ப்பு
அகமதாபாத் விமான விபத்தின் வைரல் வீடியோவை படம்பிடித்த சிறுவனை சாட்சியாக போலீசார் சேர்த்துள்ளனர். விமானம் புறப்படும் வீடியோவை எதேச்சையாக 17வயது சிறுவன் ஆர்யன் வீடியோ எடுத்தான். அதில் தான் விமானம் டேக் ஆப் ஆன 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அகமதாபாத் போலீசார் சிறுவனை அழைத்து அவனது வாக்குமூலத்தை பதிவு செய்து, இந்த கோர விபத்தின் சாட்சியாக அவனை சேர்த்துள்ளனர்.
* உடனடி இன்சூரன்ஸ் தொகை
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உடனடி இன்சூரன்ஸ் வழங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளன. விமான டிக்கெட்டுடன் இன்சூரன்ஸ் தொகை உண்டு என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு எளிதான முறையில் இன்சூரன்ஸ் வழங்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
* விமானத்தின் வலது பக்க இன்ஜின் மார்ச் மாதம் மாற்றப்பட்டது
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் விரிவான பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. வரும் டிசம்பரில் அடுத்த திட்டமிடப்பட்ட விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பழமையான விமானத்தின் வலது பக்க இயந்திரம் கடந்த மார்ச் மாதம் தான் மாற்றியமைக்கப்பட்டது, அதே நேரத்தில் இடது பக்க இயந்திரத்தின் ஆய்வு ஏப்ரல் மாதம் நடந்தது. எனவே என்ஜின்களால் விமானத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ஏர் இந்தியா ரூ.25லட்சம் நிவாரணம்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்தவருக்கும் இடைக்கால இழப்பீடு தொகையாக ரூ.25லட்சம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு தொகையானது ஏற்கனவே தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அறிவித்து இருந்த ரூ.1கோடி இழப்பீடு தொகையுடன் கூடுதலாக வழங்கப்படும்.
* ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அகமதாபாத் மருத்துவமனையில் விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ‘‘விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஏர் இந்தியா விமான விபத்தில் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
* ஏர் இந்தியாவின் விமான எண் 171 ரத்து
அகமதாபாத்தின் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஏஐ 171 விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அபாயகரமான விபத்துக்களுக்கு பிறகு விமான நிறுவனங்கள் விபத்தில் சிக்கிய விமான எண்களை பயன்படுத்துவதை நிறுத்துவது ஒரு பொதுவான நடைமுறையாகும். இந்நிலையில் வருகிற 17ம் தேதி முதல் ஏர் இந்தியாவின் அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமான எண் ஏஐ171க்கு பதிலாக ஏஐ159 என்ற எண்ணாக இருக்கும்.
முன்பதிவு முறையில் தேவையான மாற்றங்கள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரசும் தனது விமான எண்ணான ஐஎக்ஸ் 171 ஐ நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விமான எண் 171 ஐ நிறுத்துவது விபத்தில் இறந்தவர்கக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாகும்.