புதுடெல்லி: குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பயணிகள் உள்பட 270 பேர் பலியாகினர். இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. இதையடுத்து வௌிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்களில் 15 சதவீத அளவு குறைப்பதாக சில தினங்களுக்கு முன் ஏர் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் உள்ளூரில் இயக்கப்படும் சில விமானங்களை ரத்து செய்தும், சிலவற்றை குறைத்தும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா வௌியிட்ட அறிவிப்பில், “பெங்களூரு -சிங்கப்பூர், புனே -சிங்கப்பூர் மற்றும் மும்பை – பாக்டோக்ரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் வார விமானங்கள் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், டெல்லி -பெங்களூரு, டெல்லி- மும்பை உள்ளிட்ட பல வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் சேவை குறைக்கப்படுகிறது. விமான செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்து, சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.