சென்னை: சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைத்து முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். மும்பையில் நடைபெறும் உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று கடலோர மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சிறு துறைமுகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் சார்பாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
இன்றைய உலக நடப்பில், அனைத்து நாடுகளின் வர்த்தகமும் நீர்வழிகளையே நம்பியுள்ளது. சுமார் 80% சதவீதம், சர்வதேச சரக்குகள் கப்பலின் வழியே பயணிக்கின்றன. ஆசிய நாடுகளில், சுமார் 64% சதவீதம் இறக்குமதி சரக்குளும், 42% சதவீதம் ஏற்றுமதி சரக்குகளும் கையாளப்படுகின்றன. தமிழ்நாடு, 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் செயல்பாடுகளில், தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவின் சிறப்புமிக்க சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய மூன்று பெரும் துறைமுகங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
இந்த பெரும் துறைமுகங்களுடன், அறிவிக்கப்பட்டுள்ள 17 சிறு துறைமுகங்களும் உள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகம், பெரும் துறைமுகங்களுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களுடன் சிறு துறைமுகங்கள் முக்கிய பங்காற்றி, வளர்ந்துவர மிக சாதகமாக சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் முக்கிய பங்காற்றுகிறது.
முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக முதலீடு செய்வதை, தமிழ்நாடு முதல்வர் பெரிதும் விரும்புகிறார். முதலீட்டுக்கு நல்ல சிறப்பான சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தருவதில் முனைப்பாக இருக்கிறார் என்பதால், உலக முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல்வர், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில், சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளார். இங்கு வந்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும், இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.