பெரியகுளம்; திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, புதிய அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக்குளம் பேரூராட்சி, பேரூராட்சி 1 முதல் 15 வார்டுகள் கொண்டதாகும்.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தாமரைக்குளம், தாசில்தார் நகர், காலேஜ் விலக்கு, பங்களாபட்டி, காந்திநகர், கும்பக்கரை சாலை ஆகிய பகுதிகள் இருந்து வருகிறது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியாக இருந்த தாமரைக்குளம் தேர்வுநிலை தேர்வு உள்ளாட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்டு வந்த நிலையில், அதற்கு பின்பு திமுக தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்தது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் திமுக மற்றும் கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் பேரூராட்சியை கைப்பற்றியது. தலைவராக பால்பாண்டி, துணைத் தலைவராக மலர்கொடி சேதுராமனும், செயல் அலுவலராக ஆளவந்தார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிக்கு தாமரைக்குளம் கண்மாயில் நீர் உறிஞ்சும் குமிழி மூலமும், சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும் பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பைப்புகள் தாமரைக்குளம் பிரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரியகுளம் நகர் பகுதி, வடுகபட்டி சாலை பிரிவு, தண்டுப்பாளையம் மெயின் ரோடு மற்றும் பாலத்தின் மீது சென்று பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வடுகபட்டி சாலை பிரிவு மற்றும் தண்டுபாளையம் பாலத்தின் அருகே வாகனங்கள் குழாய் பதிப்பின் மீது ஏறி செல்வதாலும் அவ்வப்போது ஏற்படும் உடைப்புகளால் குடிதண்ணீர் வீணாகி சில நாட்களுக்கு மேலாக தாமரைக்குளம் பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலநிலை ஏற்படுகிறது. மேலும் குடிநீரில் சாலையோர கழிவுகள், குப்பைகள் விழுவதால் சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் செல்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து அவ்வப்போது குழாய் பைப்புகளை ஆய்வு செய்து பெரியகுளம் வைகை அணை சாலை பிரிவு, தண்டுபாளையம் பாலம், போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் மராமத்து பணிகள் செய்து பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கி வந்தனர்.சோத்துப் பாறை அணை கூட்டு குடிநீர் திட்ட குழாய் பைப்புகளை தேசிய நெடுஞ்சாலையின் வழியே விடாமல் தாமரைக்குளம் பிரிவு, வைகை அணை சாலை, பங்களாபட்டி வழியாக தாமரைக்குளம் பேரூராட்சி பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.