*கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தி கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமான நிலையில் இடிந்து விழும் சூழலில் இருந்து வந்ததையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் அப்போது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதன் எதிரொலியாக சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றினர்.
அந்த காலகட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் பள்ளிகள் இல்லாத சூழ்நிலையில் பின்னலூரில் மட்டும் பள்ளி இருந்து வந்தது. நூற்றாண்டை கடந்த இந்த பள்ளியில் பலரும் கல்வி பயின்று ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி, முக்கிய உயர் பதவிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் பெயர் பெற்ற இந்தப் பள்ளியில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற மாணவி நீட் தேர்வில் முதலிடம் பெற்று மருத்துவ படிப்பிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் பின்னலூரை சுற்றியுள்ள, கரைமேடு, அம்பாள்புரம், உளுத்தூர், பிரசன்ன ராமாபுரம், மஞ்சக்கொல்லை, மிராலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி கல்விக்காக வடலூர், சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயில வேண்டிய நிலை இருக்காது.
எனவே, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி கூடுதல் கட்டிடங்களை கட்டி அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். சேதமான பள்ளி கட்டிடத்தை அகற்றி சில ஆண்டுகள் கடந்தும் புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் ஆசிரியர்கள் முயற்சி எடுக்கவில்லை. பள்ளியின் முன்புறம் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
நமக்கேன் என்று ஒவ்வொரு ஆசிரியரும் பாடம் நடத்தினோமா, வீட்டுக்கு சென்றோமா என்ற நிலையில் நிர்வாகம் செய்து வருகின்றனர். எனவே, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளியை ஆய்வு செய்து கூடுதல் பள்ளி கட்டிடம், வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு திடல், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.