சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய பயணிகள் விமானம், காலை 10.20 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், இரவு 8 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்களும், நேற்று பகல் 1.30 மணிக்கு மதுரையில் இருந்து, சென்னை வர வேண்டிய பயணிகள் விமானம், இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் ஆகிய 2 விமானங்கள் என மொத்தம் 5 விமானங்கள் ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டன.
துபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இலங்கை, அந்தமான், கோழிக்கோடு, கொல்கத்தா, ஐதராபாத், திருச்சி, மதுரை, கோவா, மும்பை ஆகிய 9 விமானங்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.இந்த விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களுக்கு என்ன காரணம் என்று, விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. நேற்று விமானிகள் மற்றும் விமான பொறியாளர்கள் சிலர் திடீரென விடுப்பு எடுத்து விட்டதால், விமானங்களை இயக்க விமானிகள் இல்லாத காரணத்தால் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.