Sunday, September 15, 2024
Home » செப்.10ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: 18ம் தேதி தேரோட்டம்; 19ல் தீர்த்தவாரி

செப்.10ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: 18ம் தேதி தேரோட்டம்; 19ல் தீர்த்தவாரி

by Neethimaan


திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா வரும் செப்.10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.18ம் தேதி தேரோட்டமும், 19ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு சதுர்த்தி விழா செப்.10ம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. அன்று இரவு தங்கமூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.

2ம் நாள் முதல் 8ம் நாள் திருவிழா வரை தினசரி காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். 2ம் நாள் இரவு சிம்ம வாகனம், 3ம் நாள் இரவு பூத வாகனம், 4ம் நாள் இரவு கமல வாகனம், 5ம் நாள் இரவு ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருவார். 6ம் நாள் (செப்.15) மாலை 6 மணியளவில் கஜமுக சூரசம்காரம் நடைபெறும். 7ம் நாள் இரவு மயில்வாகனம், 8ம் நாள் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். 9ம் நாள் (செப்.18) காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

மாலை 4 மணியவில் தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 10ம் நாள் (செப்.19) காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி சா.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி க.சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

18 − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi