தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்வி பயில மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, ஏழை, நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பலர் தங்களது மருத்துவ கனவை நிறைவேற்றினர். ஆனால், ஒன்றிய அரசு, நீட் என்ற பெயரில் இந்த வாய்ப்பை தகர்த்து, சின்னாபின்னமாக்கியது. நீட் விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநரும், குடியரசு தலைவரும் நிலுவையில் வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் நீட் தேர்வு நடத்துவது, மாணவர்கள் மீது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமைகள் மீதான திணிப்பு ஆகும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் இது தவறான அணுகுமுறை ஆகும். ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கையே இது காட்டுகிறது. 2001-2014 வரை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, 8 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. அதில் 5 அரசு கல்லூரி. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த கல்லூரியில் சுமார் 22 ஆயிரம் ரூபாய் செலவிலேயே மருத்துவம் படிக்க இயலும்.
ஆனால், தற்போது நீட் பயிற்சி நிலையங்களில் லட்சங்களில் செலவு செய்து, தேர்வாகி வருபவர்களால் இந்த இடங்கள் நிரப்பப்பட்டால், குறைந்த செலவில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போகும் அபாய சூழல் எழுந்துள்ளது. காமராஜர், முதல்வராக இருந்தபோது, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நேர்முக தேர்வு நடக்கும். அப்போது மாணவர்களின் பெற்றோர் படிக்காதவர்களாக அல்லது ஏழையாக இருந்தால் அவர்களது பிள்ளைக்குத்தான் அவர் முதலில் வாய்ப்பு அளிப்பார். ‘‘அரசு ஊழியர் பிள்ளையோ, படித்தவர்கள் பிள்ளையோ எப்படியாவது கல்லூரியில் சேர்ந்துவிடும். ஆனால், ஏழைகள் கல்வி பயின்றால்தான், அவர்களது சந்ததியே வளரும்’’ என்று விளக்கமும் அளிப்பார்.
ஆனால், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு, மாநில கல்வி முறையில் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை அடியோடு நசுக்குவதாக உள்ளது. அத்துடன், நீட் தேர்வை காரணம் காட்டி, பிராய்லர் பண்ணைகள்போல் பயிற்சி நிலையங்கள் வீதிக்கு வீதி உருவாகிவிட்டன. இவை லட்சங்களை குவிக்கின்றன. இப்படி செலவழித்து படிக்க வருபவர், மருத்துவத்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்க விரும்புவாரா? இல்லை, கிராமங்களுக்கு சென்று ஏழைகளுக்கு சேவை செய்ய நினைப்பாரா? மகத்தான இந்த மருத்துவ சேவை துறையை வணிகமாக்கிவிட்டது ஒன்றிய அரசு.
இந்த அவலத்தை ஒழிக்கத்தான், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நித்தமும் போராடி வருகிறார். எத்தனை இடையூறுகள் வந்தாலும், எங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தமிழ்நாடு முதல்வர் உறுதியாக உள்ளார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி நேரில் மனு அளித்துள்ளார். வேறு எந்த மாநில முதல்வரும் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்திராத நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.
இதன்மூலம் நீட் விலக்கில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்பதை தமிழ்நாடு முதல்வர் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். இனியும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காவிட்டால், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு பெரும் துரோகம் செய்கிறது என்றே பொருள். இது, தமிழ்நாடு அரசின் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலம் குறித்தது மட்டுமல்ல, மருத்துவ துறையின் எதிர்காலம் குறித்தது. சிந்திக்குமா ஒன்றிய அரசு?