திருவாடானை: திருவெற்றியூரில் ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் விடுதியை விரைவில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கு புறமாக இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரியால் உபயமாக தங்கும் விடுதி ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது முகப்பு பகுதி இடிந்து விழுந்து விட்டது. மற்ற பகுதிகளும் எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கட்டிடம் இதுவரை இன்னும் அகற்றப்படவில்லை.
தேவஸ்தான நிர்வாகத்திடம் கேட்டபோது, இந்து சமய அறநிலையத் துறைக்கு இது பற்றிய அறிக்கை அனுப்பியுள்ளோம். அங்கிருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை என்கின்றனர். இந்நிலையில் இக்கட்டிடத்தின் பின்பகுதியில் புதிதாக பொதுமக்கள் கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. புது கழிப்பறை செயல்பாட்டுக்கு வந்து விட்டால் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆபத்தான கட்டிடத்தை கடந்து தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டும். அப்போது பெரிய அளவில் பழுதான இந்த கட்டிடம் இடிந்து விட்டால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பதற்குள் ஆபத்தான இந்த தங்கும் விடுதியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.