வருசநாடு : அமாவாசை நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.தென்தமிழகத்தில் சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆபத்தான மலைப் பகுதியில் நடந்து சென்று சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
தேனி மாவட்ட பக்தர்கள் வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை யானைகெஜம் வழியாக மலைப்பாதையில் 24 கி.மீ. நடைபயணமாக சதுரகிரி சென்று வழிபடுவார்கள். உப்புத்துறை யானைகெஜம் அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி, புதுகருப்பசாமி கோயில்களில் வழிபட்டு பக்தர்கள் பயணத்தை துவக்குவார்கள். இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கருப்பண்ண சாமியை வழிபட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்கின்றனர். இங்கு கருப்பையாபுரம்-வாய்க்கால்பாறை அன்னதான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தேனியிலிருந்து உப்புத்துறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறையினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையேறுவதற்கு முன்பு ஆட்டுப்பாறை அடிவாரத்தில் வனத்துறையினர் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்து அனுப்புகின்றனர். ஆபத்தான பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளதா என சோதனை செய்து அனுப்புகின்றனர். பக்தர்கள் பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல மயிலாடும்பாறை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மலைப்பாதையில் மணல்கேணி, ரேடியோ பாறை, போதைமேடு, போதைபுல்மேடு, தாணிப்பாறை பிரிவு வழியாக சதுரகிரியை சென்றடைவர். ரேடியோ பாறை பகுதியிலும் சாத்தூர் வனச்சரகத்தினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.