பூதப்பாண்டி: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் சாலையில் சுமார் 40 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலின் கீழ் பகுதி முழுவதும் உருக்குலைந்து துண்டாகி கிடந்தது. தகவலறிந்து பூதப்பாண்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் குலசேகரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராபின்சன் (45) என்பது தெரியவந்தது. அவரது உடல் அருகே வெடி மருந்து வாசனை வீசியது. விசாரணையில் அந்த பகுதி விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து சிதறியதில் வேட்டைக்கு சென்ற ராபின்சன் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.