*குமரியில் கைவரிசை காட்டிய போது சிக்கினார்
நாகர்கோவில் : பைனான்ஸ் கட்டாத நிலையில் தனக்கு சொந்தமான பைக்கை பைனான்ஸ் நிறுவனம் பறித்ததால், திருடனாக மாறி வித, விதமான பைக்கை திருடி ஊர் சுற்றி வந்த வாலிபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி, தனிப்படை எஸ்.ஐ. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். பைக் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியில் பைக் திருடி சென்ற வாலிபர் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதன் பேரில் அவர் யார்? என்பது குறித்த விசாரணையில் இறங்கினர். இதில் அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நெல்லை, குமரி மாவட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பேச்சிமுத்துவை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரை கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளி்ல பைக் திருடியதும், மேலும் பல்வேறு வீடுகள், கோயில்களில் குத்து விளக்கு மற்றும் பொருட்கள் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 4 பைக்குகளும், குத்து விளக்குகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான பேச்சிமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. கைதாகி உள்ள பேச்சிமுத்து, பைக் மெக்கானிக் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் மூலம் பைக் எடுத்திருந்தார். ஆனால் லோன் சரியாக கட்ட முடியாததால், பைக்கை பைனான்ஸ் நிறுவனத்தினர் எடுத்து சென்றனர். இதனால் பேச்சிமுத்து பைக் இல்லாமல் நடந்து செல்ல வேண்டிய நிலை உருவானது. தான் ஆசையாக வாங்கிய பைக் பறி போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்.
மேலும் இவர் பைக்கில் சுற்றி திரிந்ததை சுட்டி காட்டி பலரும் கிண்டலாக பேச தொடங்கினர். இதனால் எப்படியாவது வித,விதமான பைக்கில் வர வேண்டும் என முடிவு செய்த பேச்சிமுத்து, பைக் திருட்டில் ஈடுபட்டார். ஏற்கனவே மெக்கானிக் என்பதால், எளிதில் பைக்கை திருடி வந்துள்ளார். அந்த திருட்டு பைக்கில் நம்பர் பிளேட் கூட மாற்றாமல் ஊரில் சுற்றி திரிந்துள்ளார். அந்த பைக்குகளுக்கு பெட்ரோல் போடுவதற்காக குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரிய வந்தது.