ஒவ்வொரு நாளும் நாம் அனைவருமே ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக உடற்பயிற்சி என்ற வார்த்தையானது, உடற்தகுதி அல்லது அதிகபட்சமாக நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தரும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் உடற்பயிற்சி என்பது உடற்தகுதி, ஆரோக்கியம் மட்டுமல்ல அதற்கும் மேலாக ஒரு நல்ல ஆளுமையை உருவாக்கக்கூடியது. இந்த நல்ல ஆளுமைக்குள் பண்பு, பழக்கவழக்கங்கள், நடத்தை, நம்பகத்தன்மை, ஒழுக்கம் போன்றவை அடங்கும். மேலும் நம் உடலுடன் மனதை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆகையால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியானது மிகமிக அவசியமானதாகும். கல்வி செயல்திறனை மேம்படுத்துவதில் உடற்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்களின் நடத்தை மற்றும் பிற உடல்நலம் தொடர்பான சிக்கல்களைக் குறைத்து மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. உடற்கல்வி நல்ல தலைமைத்துவக் குணங்கள், முடிவெடுக்கும் மனப்பான்மை மற்றும் ஒரு தனித்திறன் வாய்ந்த குழு வீரராக திகழச்செய்து இளைஞர்களின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மாணவர்களிடம் நேர்மறையான விளைவுகளை உருவாக்கி கல்வி செயல்திறனில் சாதனை படைக்க வழி செய்கிறது.
உடற்பயிற்சி உடலளவில் உங்களைப் புத்துணர்ச்சி பெறச் செய்வதோடு மனநிலையையும் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மேலும் ஆழ்ந்த நினைவாற்றலை வழங்கி சில சிக்கலான சூழ்நிலைகளில் சரியான தீர்வு காண்பதற்கான திறன்களைப் பெற உதவுகிறது. மாணவர்களைப் பொறுத்தவரை உடற்கல்வியால் உண்டாகும் இந்த உளவியல் நன்மைகள் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமாக அமைகிறது. வளமான நினைவாற்றலை வழங்கி தன்னம்பிக்கையை பலப்படுத்துகிறது. விளையாட்டில் தீவிரமாகப் பங்கேற்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையில் நல்ல மற்றும் விரும்பிய பதவிகளைப் பெறுவதில் முன்னணியில் உள்ளனர்.உடற்கல்வியும், கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறப்படுகிறது. உடற்கல்வி வளரும் மொட்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தருகிறது. ஒரு தனிநபரின் சமூக வாழ்க்கையை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கை, தகவல் தொடர்புத் திறன், சமூகத் திறன்கள், நேர மேலாண்மை, புதுமை படைத்தல், சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. உடற்கல்வி ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், ஒருவரது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.