திருமலை: ஆந்திராவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளருக்கு பதிலாக முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்டபாலம் தொகுதிக்கு உட்பட்ட செர்லோபள்ளி கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதுவும் குரவம்மா என்ற பெண்ணின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் உள்ளது.
இந்த புகைப்படம் தெளிவாக தெரிந்தாலும், ஓட்டுச்சாவடி ஊழியர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த படம் இணையத்தில் பரவி வருகிறது. இது அவர்களின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. மறுபுறம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தால் கடும் கோபத்தில் உள்ளனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க தெலுங்கு தேசம் கட்சி திட்டமிட்டுள்ளனர்.