கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது தேசத்தின் அனைத்து மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரந்து விரிந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிவரும் நமது நாட்டுநலப் பணி இயக்கம் (National Service Scheme-NSS) தமிழகத்தில் 1969ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் தொடங்கப்பட்டு, அனைத்துக் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.நாட்டுநலப் பணியின் வரலாற்று பாதை: காந்தியடிகள் மாணவர்கள் தங்களின் படிப்புக் காலத்தில் அவர்களின் முக்கியப் பணியாகத் தேசத்திற்குத் தொண்டு செய்வதை ஒரு கடமையாகவும் ஒரு நல்வாய்ப்பாகவும் கருதினார். அவரின் எண்ணத்தை ஈடேற்றும் விதமாக கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி அவர்களின் சமூக இடர்ப்பாடுகளைக் களைவதில் மாணவர்கள் குறிப்பாக இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவின்(University Grants Commission) முனைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் நமது கல்வி நிறுவனங்களில் தன்னார்வ அடிப்படையில்(Voluntary basis)மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு ஒரு ஆக்கப்பூர்வமான இணைப்பைச் சமூகத்துடன் ஏற்படுத்தும் வகையில் நாட்டுநலப் பணியின் திட்டச் செயல்பாடுகள் வகுக்கப்பட்டன.
இந்த புதிய யோசனையை நடைமுறைப்படுத்த மத்திய கல்வி ஆலோசனை மையத்தின் (Central Advisory Board of Education) கூட்டம் ஜனவரி 1950ல் நடத்தப்பட்டு, பல நாடுகளில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்களின் கல்விநேரம் போக சில மணி நேரம் தங்களின் உடல் உழைப்பைத் தன்னார்வ அடிப்படையில் வழங்கி சேவை செய்யும் வகையில் நாட்டுநலப் பணி நமது நாட்டின் முதலாம் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் 1952ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. பின்னர் 1958ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த யோசனையை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவித்து உயர்கல்வி பெறுவதற்கு இதனை ஒரு முக்கியத் தேவையாகக் கொண்டுவந்தார். பின்னர் மத்திய கல்வித்துறை வாயிலாக தேசிய சேவையை ஒரு அங்கமாகக் கல்விநிறுவனங்களில் கொண்டுவரப்பட்டது. இந்த திட்ட முன்மாதிரி உருவாக்கப்பட்டு பின்னர் மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டு ஒரு அவசரத் தேவையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைக்கு வந்தது. இந்த மாநாட்டில் ஒரு குழுவை அமைத்து மேலும் நாட்டுநலப் பணியைச் செயல்படுத்த முடிவுச் செய்யப்பட்டு முனைவர்.C.D.தேஷ்முக் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டுநலப் பணியைக் கட்டாயமாகப் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின்னர் 1960ல் இந்திய அரசு பேராசிரியர், K.G.சையுதீன் தலைமையிலான குழு அமைத்து பல நாடுகளில் மாணவர்களின் தேசிய சேவை முயற்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து “இளைஞர்களுக்கான தேசிய சேவை”(National Servicefor Youth) என்ற திட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படத்தொடங்கியது. பின்னர் முனைவர் D.S.கோத்தாரி கல்விக்குழுத் தலைமையிலான பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்கள் கல்விப் பருவத்திற்கு (Stages of Education) ஏற்ப உருவாக்கப்பட்டு “நாட்டுநலப்பணி”தன்னார்வ அடிப்படையில் நடைமுறைக்கு வந்தது. இதற்காக ஐந்தாவது திட்டக்குழுவில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செப்டம்பர் 24, 1969ல் அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் முனைவர் V.K.R.V. ராவ் இதனை அனைத்து மாநிலங்கள் உள்ளடக்கிய 37 பல்கலைக்கழகங்களில் மாநில முதல்வர்களின் ஒத்துழைப்புடன் தொடங்கி வைத்தார்.நாட்டு நலப்பணியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்: நமது நாட்டில் உள்ள சமூகப் பிரச்னைகள் பற்றி மாணவர்கள் புரிந்துகொண்டு ஆக்கப்பூர்வமாகப் இப்பிரச்னைகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவர்களின் பங்களிப்பு மற்றும் திறன்கள் வாயிலாக உரிய தீர்வுகளைத் தரும் வகையில் நாட்டுநலப் பணி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக நமது கல்வி நிறுவனங்களில் பயிலும் இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்புகளுடன் (Leadership capabilities), ஆளுமைத் திறன்களுடன் (Personality skills) ஒரு குழுவாக இணைந்து (Team) செயல்படவும், தங்களின் தொடர்புத் திறன்களை (Communication skills) வளர்த்துக்கொண்டு நமது தேசத்தின் பல நடைமுறைப் பிரச்னைகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள், அவசரச்
சூழல்களில் (Emergency situations) சிறப்பாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் சமூக ஒற்றுமையைப் பேணிக் காக்கும் பயிற்சிகளைப் பெறுவதால் அவர்களால் நிகழ் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த நாட்டுப்பற்று மிக்க குடிமகன்களாகச் செயல்பட முடிகிறது. தங்கள் பங்களிப்பைப் பொதுச் சேவைகளில் வழங்க முடிகிறது. சிறப்பாகச் செயல்பட்டு பலருக்கு உதவுவதுடன் தங்கள் பங்களிப்பைத் தொடர்ச்சியாக சமுதாய மேம்பாடு அடைய வழங்க முடிகிறது.தமிழகத்தில் நாட்டுநலப் பணியின் செயல்பாடுகள்: கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களிலும் நாட்டுநலப் பணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் கடந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டுநலப் பணியின் செயல்பாடுகள் நமது மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவுவதாக அமைந்தது.
குறிப்பாக நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பலநூறு நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து கொரோனா பெருந்தொற்று பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரம், விழிப்புணர்வு விடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பகிர்ந்தனர். அதேபோல் சிறப்பாகச் செயல்பட்ட கொரோனா தடுப்பு வீரர்களுக்குப் பாராட்டுகளை வழங்கி ஊக்குவிப்பது, நோய்த் தடுப்பு உறுதிமொழிகளை ஏற்கச் செய்வது, கொரோனா தடுப்பு ஊசிகளைப் பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்வது, முன்களப் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு சாதனங்களை வழங்குவது, கபசுரக்குடிநீரைப் பொது இடங்களில் வைத்து அனைவருக்கும் வழங்குவது, மூன்றாவது அலையைத் தடுக்க மேற்கொண்ட விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கறுப்புப் பூஞ்சை நோய் தடுப்பு முறை பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்கள், நோய்த் தடுப்பு முறைகள் பற்றிய இணையதள மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக நடத்தினர். இத்தகைய சாதனை முயற்சிகள் தொடரவும் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் சக்தியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே இன்று கல்வி நிலையங்கள், வகுப்பறையில் உள்ள பல சமூகப் பிரச்னைகளில் இருந்து மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களை சமூகத்தின் ஆக்கப்பூர்வமான பணிகளில் தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்கச் செய்யமுடியும்.
முனைவர். தி.ராஜ் பிரவின்
நீங்களும் வரைந்து பழகுங்கள்
குழந்தைப் பருவத்திலேயே நம் அனைவருக்குள்ளும் இருந்து முதலில் வெளிப்படுவது ஓவியம் வரையும் திறமைதான். ஆனால் காலப்போக்கில் நம் கவனம் தடம் மாறி வெவ்வேறு தனித்திறமைகளை வளர்த்துக்கொள்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும் நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கரிக்கட்டை கிடைத்தால்கூட தரையிலும், சுவரிலும் கிறுக்கி நம் மனதில் தோன்றியதை கோடுகளாக, வட்டங்களாக, சதுரங்களாக வரைந்திருப்போம். இப்போதும் இதை உறுதிபடுத்தும் விதமாக நம் வீட்டு குழந்தைகள் தம் கைக்கெட்டும் உயரம் வரை பென்சில் மற்றும் பேனாவால் ஏதாவது கிறுக்கியிருப்பார்கள். உற்றுப்பார்த்தால் ஓராயிரம் ஓவியங்கள் மாடர்ன் ஆர்ட்டாக சுவரில் மலர்ந்திருக்கும். அதைக் கண்டு பெரும்பாலும் நாம் கோபப்பட மாட்டோம். காரணம் நாமும் அந்த பருவத்தில் இப்படித்தான் செயல்பட்டோம் என்பதால் குழந்தையின் கற்பனைத்திறனை ரசிப்போம். உண்மையில் அது விரலுக்கான அற்புதமான பயிற்சியும் கூட. கண் இமைக்கும் நேரத்தில் இரு கோடுகளை வரைந்து ஓவியமாக்கும் வித்தை இன்றைய குழந்தைகளிடம் நிறையவே இருக்கிறது. அப்படி நம் குழந்தைகளின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை ஊக்கப்படுத்தி , ஓவியராக்கும் சிறு முயற்சியே இந்த பகுதி.