புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள 3ம் கட்ட தூய்மை பிரசாரத்தின் மூலம், அரசு அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மூலம் ரூ.1000 கோடி வருவாய் ஈட்டப்படலாம் என ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது. அரசு அலுவலகங்களில் தேவையில்லாத பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தவும், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணவும் ‘ஸ்வச்சதா’ பிரசாரத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஒன்றிய அரசு அலுவலகங்கள் உள்ளேயும், வெளியிலும் சுத்தம் செய்யப்படுகின்றன. இதன் 3ம் கட்ட தூய்மை பிரசாரம் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கும்.
இதன் படி, அரசின் அனைத்து துறைகளும் வாரத்திற்கு 3 மணி நேரம் தூய்மை பிரசாரத்திற்கு ஒதுக்கி பணியாற்ற வேண்டும். இது குறித்து நிர்வாக சீர்த்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் செயலாளர் ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டியில், ‘‘தூய்மை பிரசாரம் 2ம் கட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. 1.37 லட்சம் இடங்களில் இந்த பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது, 50 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டு, 172 லட்சம் சதுர அடி அலுவலகம் இடம் சுத்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் 31.35 லட்சம் பொதுமக்கள் குறை குறித்த வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதில் அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகள் மூலம் மட்டுமே அரசுக்கு ரூ.520 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு 3ம் கட்ட பிரசாரத்தில் அகற்றப்படும் கழிவுகள் மூலம் ரூ.1000 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கிறோம். தூய்மை பிரசாரம் 3ம் கட்டத்திற்கு அனைத்து அரசு அலுவலகங்கள் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.