புதுடெல்லி: பிஎப் கணக்கில் தனிப்பட்ட விவரங்களை இனி ஆன்லைன் மூலம் எந்த சரிபார்ப்பும், ஒப்புதலும் இல்லாமல் எளிதாக மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 7.6 கோடி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இபிஎப்ஓ இணையதளம் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இபிஎப்ஓ ஆன்லைனில் 2 புதிய வசதிகளை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்படி, யுஏஎன் எண் வழங்கப்பட்டுள்ள ஊழியர்கள் பிஎப் கணக்கில் உள்ள தங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாய் பெயர், மனைவியின் பெயர், திருமண நிலை, பணியில் சேர்ந்த தேதி, விலகிய தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக திருத்தவோ மாற்றவோ முடியும். இதற்கு முன் இத்தகவல்களை மாற்றும் போது நிறுவனத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, இபிஎப்ஓ ஒப்புதல் பெற வேண்டும். இதனால் காலவிரயம் ஆவதால் தற்போது நேரடியாக தனிப்பட்ட தகவல்களை மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல, வேறு நிறுவனத்திற்கு மாறும் போது இ-கேஒய்சி செய்த ஊழியர்கள் ஆதார் ஓடிபி மூலமாக தங்கள் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும். இதற்கு முன் இதற்கு முந்தைய நிறுவனத்தின் ஒப்புதல் வேண்டும். தற்போது அந்த ஒப்புதல் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் பரிமாற்றத்தை இபிஎப்ஓவிடம் தாக்கல் செய்யலாம்.


