திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அருகேயுள்ள, பொதட்டூர்பேட்டை-நகரி சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகம் (60) என்பவர் அவரது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், தனது கடையில் வைத்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் சண்முகத்தின் பெட்டிக்கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்த 65 பாக்கெட் புகையிலை மற்றும் 150 பாக்கெட் குட்கா உட்பட 2 கிலோ எடைகொண்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சண்முகத்தை கைது செய்தனர். இதனையடுத்து, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்த சண்முகத்தின் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.